Teenager Rescued Alive After 6 Days X
உலகம்

அடர்ந்த காட்டுக்குள் டிரெக்கிங்!! 6 நாட்கள் தனியாக தவிப்பு.. சிறுவன் மீண்டது எப்படி?

ஆஸ்திரேலியாவில் நண்பருடன் கேம்பிங் சென்ற 17 வயது சிறுவன், வழிதவறி அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

Premkumar S

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வால்ஹல்லா (Walhalla) என்ற மலைப்பகுதியில், கடந்த நவம்பர் 6-ம் தேதி வில்லியம் என்ற 17 வயது சிறுவன் தனது நண்பருடன் டிரெக்கிங் சென்றுள்ளார். ஆட்டிசம் பாதிப்புள்ள வில்லியம், நவம்பர் 6-ம் தேதி இரவு, தனது கைபேசியை கூடாரத்திலேயே வைத்துவிட்டுட்டு கேம்ப்-க்குத் தேவையான கூடுதல் பொருட்களை எடுப்பதற்காகச் சிறிது தூரம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகு அவர் முகாமுக்குத் திரும்பவில்லை. இதையடுத்து, அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், காட்டில் வழி தவறிய வில்லியம், மிகவும் கரடுமுரடான பாதைகள் மற்றும் செங்குத்தான மலைப்பகுதிகளில் பல நாட்கள் நடந்து சென்தாகவும், பின்னர், ஒரு பள்ளத்தில் தவறி விழுந்ததால், அவரால் மீண்டும் மேலே ஏற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், அவரின் உணவுப் பொருட்கள் இல்லாத நிலையில், அருகிலிருந்த ஓடையில் கிடைத்த தண்ணீரைப் பருகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவிபோது, 2 துண்டுத் துணிகளைப் போர்வையாகப் பயன்படுத்தி உறங்கியுள்ளார். பகலில் வெயில், சில நேரங்களில் மழை எனப் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தான், நேற்றைய முன் தினம் (நவம்பர் 12) காவல்துறையின் ஹெலிகாப்டர் மூலம் வான்வழித் தேடுதல் நடைபெற்றது. அப்போது, காட்டுப்பகுதியில் கிடந்த அவரது பொருட்களில் ஒன்றான மீன்பிடி உபகரணப் பெட்டியை மீட்புக் குழுவினர் கவனித்தனர். பின்னர், அந்தப் பகுதியை உன்னிப்பாகக் பார்த்தபோது, அருகிலிருந்த வறண்ட ஓடைப் படுகையில் ஒரு பாறையின் மீது வில்லியம் படுத்திருப்பது தெரியவந்தது. ஹெலிகாப்டரின் சத்தம் கேட்டு விழித்த வில்லியம், மீட்புக் குழுவினரைப் பார்த்துக் கையசைத்து, கட்டைவிரலை உயர்த்திக் காட்டியுள்ளார். இதையடுத்து, அவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

6 நாட்கள் அடர்ந்த காட்டுக்குள் தனியாகச் சிக்கியிருந்தாலும், மன உறுதியையும் நம்பிக்கையையும் இழக்காமல் உயிர் பிழைத்த 17 வயது சிறுவனின் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.