ஈரான் தாக்குதல் Pt web
உலகம்

கூகுள், மைக்ரோசாப்ஃட், ஐபிஎம்தான் அடுத்த இலக்கு.. எச்சரிக்கை விடுத்த ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது தாக்குதல் நடத்தவிருப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

PT WEB

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை தாக்கியதைத் தொடர்ந்து, ஈரான் பல தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்காகக் கொண்டுள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்ட பட்டியலில் கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கியுள்ளன.

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்தன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீதான போரை பிப்ரவரி 28 அன்று ஏவுகணைத் தாக்குதலுடன் தொடங்கியது. முதல் நாளே ஈரான் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா காமேனி மற்றும் பிற உயர் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதன்காரணமாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல்களை நடத்திவருகிறது. அதேசமயம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவும் ஈரான் மீதான கூட்டுத்தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஈரான் மீதான் அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல்

இந்த சூழலில்தான், ஈரானின் அடுத்த இலக்கு இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தரவு மையங்கள் என்று அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பேங்க் செபா  மற்றும் அதன் கிளைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இன்று தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த நிலையிலேயே இதற்கான எச்சரிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஈரான் தாக்கவுள்ள நிறுவனங்களில் பட்டியலில், கூகுள், மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், என்விடியா போன்ற நிறுவனங்கள் இருப்பதாக தஸ்னிஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சூழலில்தான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த நிறுவனங்களில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் தள்ளியிருக்குமாறு ஈரான் அறிறுத்தியிருக்கிறது. இந்த எச்சரிக்கையத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரில் உள்ள சர்வதேச வங்கிகளுக்கு இன்று மதியமே விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டன. ஈரானின் எச்சரிக்கையால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.