இஸ்ரேல் காஸாவிற்கிடையேயான போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது. இந்த நிலையில், காசாவில் நடக்கும் போர் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வேதனை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் காஸாவிற்கிடையேயான போரில் இதுவரை 65,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போர் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. இதையடுத்து, பன்நெடுங்காலமாக வாழ்ந்துவந்த காஸாவிலிருந்து வெளியேற பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. சொந்த பூமியைவிட்டு அவர்கள் வெளியே செல்வதற்காக சலா அல்-தின் சாலையையும் இஸ்ரேல் திறந்துவிட்டுள்ளது.
நாளை மதியத்திற்குள் காஸாவிலிருந்து தெற்கு நோக்கி மக்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் குழந்தைகளையும், குடும்பத்தையும் காக்க தெற்கு காஸாவுக்கு சென்றாலும், பலர் வடக்கிலேயே உள்ளனர். அங்கிருந்து சென்றால், மீண்டும் வடக்கு காஸாவிற்கு வர முடியுமா? என்பது அவர்களின் தலையாய கேள்வியாக உள்ளது. சொந்த மண்ணில் இருந்து வேருடன் பிடிங்கி மற்றொரு இடத்தில் செடியை நடுவதுபோல, தெற்கு காஸாவுக்கு தங்களை விரட்ட இஸ்ரேல் முயல்வதாக அவர்கள் கூறுகிறார்கள்.
வடக்கில் இருந்து தெற்கிற்கு செல்லும் பயண தூரம், வழியில் பாதுகாப்பு, உணவுக்கு என்ன செய்வது போன்ற பல காரணங்கள் அவர்களின் தயக்கத்திற்கு பின் உள்ளது. ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் நோக்கோடு, வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், நாளை மதியத்திற்குள் ஒரு முடிவு எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் காஸா மக்கள் உள்ளனர்.
இந்தநிலையில்,காசாவில் நடக்கும் பயங்கரத்தை உடனே நிறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மூச்சுத் திணறும் காசா, காசாவில் நடைபெறும் பயங்கரத்தை உடனே நிறுத்த வேண்டும். காசாவில் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நேரத்தில் உலக நாடுகள் ஒதுங்கி செல்லக்கூடாது எனக் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து, குழந்தைகளின் அழுகை, பட்டினி, மருத்துவமனையின் குண்டு வீச்சு பயங்கரங்கள் மனதை உலுக்குகின்றன என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.