கத்தார் | இஸ்லாமிய நாடுகளுக்கான ராணுவ கூட்டுப்படை... எகிப்து யோசனைக்கு பாகிஸ்தான் தீவிர ஆதரவு!
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான போர் இரண்டாண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், லெபனான், ஈரான், ஈராக், ஏமன் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் ஹமாஸ் அமைப்பிற்கு உதவுவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில்தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியது.
கத்தாரின் மீது இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதல் அரபு நாடுகளை அதிர வைத்துள்ள நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் அரபு மற்றும் இஸ்லாமிய அமைப்பில் உள்ள 40 நாடுகளின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஈரான், எகிப்து, துருக்கி உட்பட பல இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த கத்தார் அமீர் ஷேக் தமின் பின் ஹமத் அல்-தானி இஸ்ரேலை கடுமையாக விமர்சித்தார். மேலும் அரேபிய நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறது இஸ்ரேல் எனவும் குற்றம் சாட்டினார்.
இதில் நேட்டோ போல அரபு, இஸ்லாமிய நாடுகள் இணைந்து ராணுவக் கூட்டுப்படையை உருவாக்கலாம் என்ற எகிப்து தனது யோசனையை கூறியது. இந்நிலையில் எகிப்தின் யோசனையை பாகிஸ்தான் தீவிரமாக ஆமோதித்துள்ளது. தொடர்ந்து, இஸ்ரேலை எதிர்கொள்வதற்கான தெளிவான பாதை உருவாக்கப்படும் என உலகிலுள்ள 180 கோடி இஸ்லாமியர்களும் எதிர்பார்ப்பதாக இக்கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் கூறினார்.
இஸ்லாமிய நாடுகளிலேயே அணுஆயுத வலிமை கொண்ட ஒரே நாடு என்பதால் பாகிஸ்தானின் இந்நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. நேட்டோவில் உள்ள துருக்கியும் இக்கூட்டத்தில் பங்கேற்றது. இஸ்ரேலை மனதில் கொண்டே, நேட்டோ பாணி கூட்டுப்படை யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் பாகிஸ்தானை, இந்தியா தாக்கவேண்டிய சூழல் ஏற்பட்டால் இப்படையின் நிலை என்னவாக இருக்கும் என்றும் கேள்வியும் எழுந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ என்ற பெயரில் பாதுகாப்பு கூட்டணி அமைத்துள்ளன. இதில் ஏதேனும் ஒரு நாடு தாக்குதலுக்குள்ளாகும் போது, பிற நேட்டோ நாடுகளும் அதற்கு துணை நிற்கும்.