சிரியா எக்ஸ் தளம்
உலகம்

சிரியா உள்நாட்டுப் போர் | 2 நாட்களில் 1,000 பேர் பலி!

சிரியாவில் உள்நாட்டுப் போரில் 2 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

Prakash J

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, கடந்த ஆண்டு இறுதியில் தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது. அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆளும் கட்சியாக மாறியது. மேலும், சிரியாவின் புதிய அரசின் இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீரும், இடைக்கால அதிபராக கிளர்ச்சிப் படையின் தலைவரான அகமது அல்-ஷராவும் தேர்வு செய்யப்பட்டனர்.

சிரியா

இந்த நிலையில், சிரியாவில் உள்நாட்டுப் போரில் 2 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. பதவியிழந்து தப்பியோடிய முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத் ஆதரவுப் படையினருக்கும், அங்கு ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் இரண்டு நாள் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 745 பேரும், பாதுகாப்புப் படையினர் 125 பேரும், அசாத் ஆதரவாளர்கள் 148 பேரும் பலியாகினர். சிரியாவின் வரலாற்றில் 14 ஆண்டுகால மோதல்களில் இது மிகவும் மோசமானது என்று கூறுகின்றனர்.