மனிதனின் ஆயுட் காலத்தை நீட்டித்துக்கொண்டே செல்வது குறித்த ஆய்வுகள் ரஷ்யாவில் வேகம் பெற்றுள்ளன. இது தொடர்பான செய்தி ஒன்றை பார்க்கலாம்.
உயிர் வாழ்வதற்கான ஆசை மனிதர்கள் அனைவருக்கும் இருக்ககூடியதே. ஆனால், மனிதர்களாகிய நாம் ஒரு கட்டத்தில் வயதாகி உடல் தளர்ச்சியுற்று வயது மூப்பின் காரணமாக இறந்து போகிறோம். ஒருவேளை நமது இளமையை அப்படியே தக்க வைக்கவும், மரணத்தை தள்ளிப்போடவும் வாய்ப்பிருந்தால் எப்படி இருக்கும். அப்படியான ஒரு ஆய்வுதான் ரஷ்யாவில் நடந்துவருகிறது.
இது தொடர்பாக, கடந்த 9 ஆண்டுகளில் 50 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நொவாயா கெசட்டா யூரோப் (NOVAYA GAZETA EUROPE) என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தாண்டுக்கு மட்டும் ஆய்வுகளுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய மதிப்பில் 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இதில் ஒரு ஆய்வு ரஷ்ய அதிபர் மகள் மரியா வொரன்ட்சோவா (MARIYA VORONTSOVA) தலைமையில் மேற்கொள்ளப்படுவதாகும். ரஷ்யாவில் அரசுத் துறைகள் தவிர தனியார் நிறுவனங்களும் வயது மூப்பை தடுத்து மனிதனின் வாழ்நாளை நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் உண்டு.
72 வயதான ரஷ்ய அதிபர் புடின் தற்போதும் துடிப்பான நபராக உள்ளார். வயது மூப்பை தடுப்பது, இறவா நிலை குறித்த ஆய்வுகளில் புடினுக்கு ஆர்வம் அதிகம் எனக் கூறப்படுகிறது. அண்மையில் சீனா சென்ற போது கூட அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குடன் வயது மூப்பு தடுப்பு, இறவா நிலை குறித்து புடின் பேசியிருந்தார். உயிரி தொழில் நுட்பத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் இளமையை மனிதன் பெற முடியும் என்றும் மரணத்தையே வெல்லும் சூழல் கூட உருவாகும் என புடின் பேசியிருந்தார். ரஷ்யாவை போல சீனாவும் கூட வயதாவதை தடுத்து வாழ்நாளை நீட்டிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.