ecuador students protest Voz de América
உலகம்

ஈக்வடாரில் அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. தீவிரமாக இறங்கிய மாணவர்கள்! என்ன நடந்தது?

ஈக்வடாரில் அதிபர் நோபோவாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Rishan Vengai

ஈக்வடார் தலைநகரில் மாணவர்கள் மற்றும் சமூக அமைப்பினர்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணெய் வயல்களை தனியாருக்கு ஒப்படைப்பது, வேலைவாய்ப்பு குறைவு, மருத்துவமனைகளில் மருந்துப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் போராட்டத்தின் முக்கிய காரணங்களாக உள்ளன.

ஈக்வடார் அதிபர் டேனியல் (Daniel) நோபோவாவின் (Noboa) அரசுக்கு எதிராக ஈக்வடார் தலைநகர் கிட்டோவில் (Quito) பல்கலைக்கழக மாணவர்களும் சமூக அமைப்பினரும் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியின் போது, ​​தேசிய மாளிகையை நோக்கிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களின் வழிகள் காவல்துறையினரால் தடுத்து அடைக்கப்பட்டன.

இதனிடையே, அதிபரின் கொள்கைகளைக் கண்டித்து கடந்த வியாழக்கிழமையும் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் தலைநகரில் போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப்போராட்டத்திற்கு காரணமாக அரசின் கொள்கை மாற்றங்கள், எண்ணெய் வயல்களை தனியாருக்கு ஒப்படைப்பது, பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு போதுமான பட்ஜெட் ஒதுக்காதது, 18-29 வயதுக்குட்பட்ட சுமார் 6 லட்சம் பேர் வேலையின்மையாலும், ஊதியமின்மையாலும் திண்டாடுவது, பொது மருத்துவமனைகளில் மருந்துப் பற்றாக்குறை, சுகாதார அமைப்பில் முதலீடு குறைவு மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் வன்முறை போன்றவை முக்கிய பிரச்னைகளாக உருவெடுத்துள்ளது.