காசாவில் மக்கள் பட்டினியில் வாடும் நிலையில் அவர்கள் பசி தீர்க்கவேண்டும் என உலகெங்கும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தோனோசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் பாத்திரங்களில் தட்டி ஒலி எழுப்பி தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். பட்டினி சாவை தடுக்க நடவடிக்கை அண்டை நாடான எகிப்து எதுவும் செய்யவில்லை என அவர்கள் விமர்சித்தனர்.
காசாவில் மக்களை பட்டினி போடுவது மூலம் பெரிய இனப்படுகொலையே நடப்பதாக லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. சிறு பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்பி போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போராட்டம் பிரதமர் இல்லம் அமைந்துள்ள தெருவில் நடைபெற்றது.
காசாவின் அருகிலுள்ள நாடான லெபனானிலும் பசித்த மக்களுக்கு உணவு அளிக்க எதாவது செய்யுங்கள் என உலக நாடுகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றது.
இவை எல்லாவற்றையும் விட காசா மக்கள் பட்டினிக்கு காரணமான இஸ்ரேலிலேயே மக்கள் போராட்டம் நடத்தினர். பசியால் மக்களை தவிக்கவிடுவது மிகப்பெரிய குற்றம் என்றும் காசா மக்களே கவலைப்படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம் என்றும் அவர்கள் குரல் எழுப்பினர்
ஆயிரக்கணக்கானோர் சாவின் விளிம்பில் உள்ள நிலையில் உலக நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன என இஸ்ரேலிய மக்களே முழக்கம் எழுப்பினர்.