அரிசி எக்ஸ் தளம்
உலகம்

இலங்கை | பல இடங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு.. அரசு போட்ட உத்தரவு.. வணிகர்கள் அதிருப்தி!

பிரச்னைக்கு தீர்வுகிடைக்காவிட்டால் அரிசி விற்பனையிலிருந்து விலகி இருக்க முடிவு செய்திருப்பதாக இலங்கை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Prakash J

இலங்கையின் பல இடங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தச் சூழலில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யக்கூடாது என்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அரிசி விற்பனையாளர்களுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தாங்கள் கொள்முதல் செய்யும் மொத்த விலையைவிட, அரசு நிர்ணயித்திருக்கும் விலை மிகக் குறைவாக உள்ளது என்றும் வணிகர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வுகிடைக்காவிட்டால் அரிசி விற்பனையிலிருந்து விலகி இருக்க முடிவு செய்திருப்பதாகவும் நுவரெலியா மாவட்ட வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன், “சிவப்பரிசிக்கான உட்சபட்ச விற்பனை விலையை 220 ரூபாயாக அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், வர்த்தகர்களுக்கு சிவப்பரிசி மற்றும் வெள்ளையரிசி கொழும்பு சந்தையில் ஒரு கிலோ 295 ரூபாய் என்ற மொத்த விலையிலேயே கிடைக்கிறது. இந்தச் சூழலில், அரசு நிர்ணயித்துள்ள விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

அனுரகுமார திசநாயக்க

முன்னதாக, அரிசி ஆலை உரிமையாளர்களை அதிபர் அனுரகுமார திசநாயக்க சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதன்பிறகு, “இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு கிலோ அரிசியை மொத்த விலையில் 225 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 230 ரூபாய்க்கும் விற்க வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிபர் அனுரகுமார திசநாயக்க எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.