இலங்கையில் அதிபர் அனுர குமார திஸநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் உள்ளது. அவர் அதிபராகப் பதவியேற்ற பிறகு, இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக கடந்த ஆண்டு இறுதியில் வந்திருந்தார். இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடியைச் சந்தித்து திசநாயக பேசினார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர், மீனவர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருதரப்பு உறவு குறித்து இருவரும் உரையாடினர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதனால், தற்போது கச்சத்தீவு, மீனவர் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் தமிழகத்தில் மீண்டும் வேகமெடுத்து வருகின்றன. மறுபுறம், அதானி விவகாரம் பற்றிய பேச்சுகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், “அதானி விஷயத்தை அரசியலாக்குவது இந்தியா மற்றும் இலங்கையின் இராஜதந்திர உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்” என முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
மேலும் அவர், ”2023-24ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைகளுக்கு இணங்க இந்த திட்டங்களை நிறைவேற்றுவதிலும் இலங்கை - இந்திய உறவுகளை வலுப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதேவேளை, எரிசக்தி ஒத்துழைப்பில் அரசாங்கம் இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். திட்டங்களை நிறுத்துவதற்கான எந்தவொரு முடிவும் சரியான காரணங்களால் நியாயப்படுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ள அவர், அதானி திட்டத்தை பணம் தூண்டியதாக கூறப்படும் அரசாங்கத்தின் கருத்தை மறுத்துள்ளார். அத்துடன், பணம் ஊழல் செய்வதாக யாராவது கூறினால், அப்பணத்தை யார் கொடுத்தார்கள் என்பதை குறிப்பிட வேண்டும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, உலகம் முழுவதும் தொழில் முதலீடுகளில் கவனம் செலுத்திவரும் அதானி குழுமம் இலங்கையின் மன்னார் பூனேரி காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டிருந்தது. இந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த அதானி குழுமம் 20 ஆண்டு ஒப்பந்தம் போட்டிருந்தது. ரணில் விக்கிரமசிங்க அரசின்போது இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 8 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் காற்றாலை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை விநியோகிக்க அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், இத்திட்டங்களை கைவிடுவதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. அதானிக்கு மின்னுற்பத்தி நிறுவனம் தொடங்க ஒப்பந்தம் அளிக்கப்பட்ட விதத்தை ஆய்வு செய்ய இலங்கை அரசு திட்டமிட்டிருந்தது. இதுதவிர மின்சார கொள்முதல் விலையை குறைக்க அனுரகுமார திசநாயக தலைமையிலான புதிய அரசு திட்டமிட்டிருந்தது. மேலும் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ரீதியான எதிர்ப்புகளும் எழுந்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்த பின்னணியில்தான் அதானி நிறுவனம் பின் வாங்கியதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில்தான் ரணில் இந்தியா - இலங்கை உறவை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.