இலங்கை | மின் உற்பத்தி திட்டத்தை கைவிட்ட அதானி குழுமம்.. காரணம் என்ன?
இந்தியாவின் அதானி குழுமம், உலகம் முழுவதும் தொழில் முதலீடுகளில் கவனம் செலுத்திவருகிறது. அந்த வகையில், இலங்கையிலும் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் புதிய முனையம் அமைத்துவரும் பணியிலும் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது. இதுதவிர, மன்னார் பூனேரி காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் அதானி குழுமம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த அதானி குழுமம் 20 ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க அரசின்போது இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 8 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் காற்றாலை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை விநியோகிக்க அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், இத்திட்டங்களை கைவிடுவதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானிக்கு மின்னுற்பத்தி நிறுவனம் தொடங்க ஒப்பந்தம் அளிக்கப்பட்ட விதத்தை ஆய்வு செய்ய இலங்கை அரசு திட்டமிட்டிருந்தது. இதுதவிர மின்சார கொள்முதல் விலையை குறைக்க அனுரகுமார திசநாயக தலைமையிலான புதிய அரசு திட்டமிட்டிருந்தது. மேலும் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ரீதியான எதிர்ப்புகளும் எழுந்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்த பின்னணியில் அதானி நிறுவனம் பின் வாங்கியுள்ளது. அதேநேரம் கொழும்பு துறைமுகத்தில் புதிய முனையம் அமைக்கும் பணிகள் தொடரும் என அதானி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, இலங்கை அரசு அதானி குழுமத்துடனான மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. அதிபர் அனுர குமார திச நாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை, இந்த திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்வதற்கு தீர்மானித்திருந்தது குறிப்பிடத்தக்கது.