இலங்கையில், கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆளும் தேசிய மக்கள் சக்தி அதிக மெஜாரிட்டியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்படி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க தலைமையிலான ஜே.வி.பி ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், அங்கு பலவித அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ராணுவத்திடம் உள்ள இலங்கை தமிழா் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ராணுவம் மற்றும் விடுதலைப்புலிகள் இடையேயான போர், கடந்த 2009ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதற்கு முன்பும் இந்தப் பகுதியில் சுமாா் 3,500 ஏக்கா் தனியாா் நிலங்களை இலங்கை ராணுவத்தினா் கையகப்படுத்தினா். இந்த நிலங்களில் சில கடந்த 2015 முதல் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. எனினும், பெரும்பாலான இடங்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது.
தமிழா்கள் பெரும்பான்மையாக வாழும் மிகவும் பின்தங்கியுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளா்ச்சிக்கு வழிவகை செய்யப்படும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கு நேற்று சென்ற அதிபா் அநுரகுமார திசாநாயக, மாவட்ட தலைமைச் செயலகத்தில் தமிழா் பிரச்னை குறித்து பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினா். அப்போது, ராணுவ வசமுள்ள இலங்கை தமிழா்களிடம் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தாா்.