அமைச்சர்களுக்கான சிறப்புச் சலுகைகள் ரத்து.. இலங்கை அரசு அதிரடி!
இலங்கையில், கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆளும் தேசிய மக்கள் சக்தி அதிக மெஜாரிட்டியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்படி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க தலைமையிலான ஜே.வி.பி ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், அங்கு பலவித அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கிடப்பில் போடப்பட்டிருந்த பழைய வழக்குகள் மீதான விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து பழைய ஒப்பந்தங்கள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த ஆட்சியில் அதானியுடன் போடப்பட்ட காற்றாலை ஒப்பந்தம் தற்போதைய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் அமைச்சா்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் மற்றும் முன்னுரிமைகளை அந்த நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. வரம்பு மீறிய அரசியல் அதிகாரம் தொடா்பான பொதுமக்களின் கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அத்தகைய சலுகைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக அதிபா் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அமைச்சர்களின் வாகனங்கள், எரிபொருள் சேவை, ஊழியர்கள், செல்போன் மற்றும் குடியிருப்புக் கட்டணம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கான தனிப்பட்ட ஊழியர்கள் குறைக்கப்பட்டு உள்ளனர். ஒரு கேபினட் அமைச்சருக்கான துணைப் பணியாளர்கள் 15 ஆகவும், ஒரு துணை அமைச்சருக்கு 12 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களையோ அல்லது நெருங்கிய உறவினர்களையோ தனிச் செயலர், ஒருங்கிணைப்புச் செயலர், ஊடகச் செயலர் அல்லது மக்கள் தொடர்பு செயலாளராக நியமிக்க முடியாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷே தனது உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறுமாறும் தனிப்பட்ட பாதுகாப்பை கைவிடுமாறும் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டமை தொடர்பிலான விவாதங்களுக்கு மத்தியில் இந்த விதிமுறைகள் வந்துள்ளன. கடந்த டிசம்பர் மாதம் ராஜபக்சேவின் 300-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை 60ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதிபருக்கு வழங்கப்படும் சலுகைகள் அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளன என்றும், 1986இல் அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்றச் சட்டத்தின்மூலம் செயல்படுத்தப்படுவதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், இதைக் குறைக்கும் வகையில் முடிவெடுத்திருப்பதாக புதிய அரசு பதிலடி கொடுத்துள்ளது.