தவெக தலைவர் விஜய்க்கு, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், SLPP தலைவருமான நாமல் ராஜபக்ஷே அறிவுரை கூறியுள்ளார்.
நடிகராக இருந்த விஜய் 2024ஆம் ஆண்டு, பிப்ரவரி 2ஆம் தேதி முதல் அரசியல்வாதியாக மாறினார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் இருக்கும் நிலையில், தற்போது தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
எனினும், அவருடைய பரப்புரையின்போது கரூரில் 41 உயிர்கள் பறிபோனதற்குப் பிறகு தவெக மீதும் அவர்மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக, சமூக வலைதளங்களை விட்டுவிட்டு அவர் களத்திற்கு வரவேண்டும் எனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், SLPP தலைவருமான நாமல் ராஜபக்ஷே அறிவுரை கூறியுள்ளார்.
இந்தியா டுடே ஊடகத்திற்கு அவர் பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “விஜய் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக அவரது சினிமா வாழ்க்கையைப் பார்த்து வருகிறேன். ஆனால், ஓர் அரசியல்வாதியாக, அவர் இன்னும் பக்குவப்படவில்லை. விஜய் அரசியலில் நுழைந்தது எல்லைகளைக் கடந்து ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் நம்பகத்தன்மை இறுதியில் அவரது செயல்திறனைப் பொறுத்தது.
விஜயின் வருகை தமிழக அரசியலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும். ஆனால் பொதுப் பிரச்னைகள் சினிமா கதைகளைவிட மிகவும் சிக்கலானவை. அரசியல் என்பது ஒரு ஸ்கிரிப்ட் அல்ல. அது ஒரு முழுநேர பொறுப்பு. மக்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும், அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். விஜய் அரசியலை தீவிரமாக அணுக வேண்டும். மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் உண்மையில் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் நிஜ வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விஷயங்கள் திரையில் காட்டப்படுவதிலிருந்து மிகவும் வேறுபட்டவை. அரசியல் சினிமாவைவிட மிகவும் உணர்திறன் வாய்ந்தது” என அவர் விஜய்க்கு அறிவுரை வழங்கியுள்ளார்.