யூன் சுக் இயோல் எக்ஸ் தளம்
உலகம்

தென் கொரியா | பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர்.. விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு!

தென் கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் இயோலை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Prakash J

தென்கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வரப்பட்டு, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மறுபுறம், அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதற்காக யூன் சுக் இயோல் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சியோல் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இயோலை கைதுசெய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவரைக் கைது செய்யவிடாமல் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவரை கைது செய்ய இரண்டாவது முறையாக அதிகாரிகள் முயற்சித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். தென் கொரிய வரலாற்றிலேயே அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டது அதுவே முதல்முறையாகும்.

யூன் சுக் இயோல்

இந்த நிலையில், தென் கொரிய நீதிமன்றம், நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோலை சிறையில் இருந்து விடுவிக்க இன்று உத்தரவிட்டுள்ளது. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் அவரது கைது வாரண்டை ரத்து செய்து, அவரை விடுவிக்க அனுமதித்ததாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சட்டம் அனுமதித்ததைவிட நீண்டநேரம் இயோல் காவலில் வைக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் வாதாடினர். மேலும், ”அவர்மீது வழக்குரைஞர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வாரண்ட் காலாவதியானது” என தெரிவித்திருந்தனர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை இயோலின் ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் வரவேற்றுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த உத்தரவை விமர்சித்திருப்பதுடன், மீண்டும் இயோலுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.