அமெரிக்காவில் நியூயார்க் நகரின் சிறந்த 100 உணவகங்கள் பட்டியலில் தமிழகம் மற்றும் கேரள உணவுகளை வழங்கும் ‘செம்மா’ உணவகம் முதலிடம் பிடித்துள்ளது. நியூயார்க் நகரத்தின் சிறந்த 100 உணவகங்களின் பட்டியலை ஒவ்வோர் ஆண்டும் ’நியூயார்க் டைம்ஸ்’ இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ‘செம்மா’ உணவகம் இந்தாண்டு முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு, செம்மா ஏழாவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2021 முதல் கிரீன்விச் கிராமத்தில் அமைந்துள்ள செம்மா - மிச்செலின் உணவகத்தை, ரோனி மஜும்தார், சிந்தன் பாண்ட்யா ஆகிய இருவர் நடத்துகின்றனர் தமிழகத்தைச் சேர்ந்த விஜயகுமார் இங்கு தலைமை 'செஃப்' ஆக பணியாற்றுகிறார். இந்த உணவகத்தில் விற்கப்படும் கன்னியாகுமரி நண்டு மசாலா, இறால் தொக்கு, முயல் பிரட்டல், திண்டுக்கல் பிரியாணி ஆகியவற்றை அமெரிக்கர்களும் விரும்பி உண்பதாக கூறப்படுகிறது. நியூயார்க் நகரில் பெருமதிப்புமிக்க சிறப்பைக் கொண்ட ஒரே இந்திய உணவகமாக செம்மா விளங்குவதாகக் கூறப்படுகிறது.
செம்மா தனது இன்ஸ்டாகிராமில், "இந்த வெற்றி எங்களுடையது மட்டுமல்ல. இது ஒதுக்கி வைக்கப்பட்ட ஒவ்வொரு உணவு வகைக்கும். சரிபார்ப்புக்கு பதிலாக பாதிப்புடன் வழிநடத்தப்பட்ட ஒவ்வொரு சமையல்காரருக்கும். திறந்த மனதுடன் காட்டப்பட்ட ஒவ்வொரு உணவகத்திற்குமானது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான ஒரு மைல்கல்" எனப் பதிவிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், அட்டோமிக்ஸ், லு பெர்னார்டின், கபாப், ஹாஸ் ஸ்நாக் பார், கிங், பென்னி, சுஷி ஷோ, செச்சுவான் மவுண்டன் ஹவுஸ் மற்றும் குவாமே ஒன்வுச்சியின் டாட்டியானா ஆகியவை உள்ளன. இந்த ஆண்டு ஒருவித மாற்றத்தைக் குறிக்கும் வகையில், 10 நிறுவனங்களை மட்டுமே நியூயார் டைம்ஸ் தரவரிசைப்படுத்தி உள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலை நியூயார்க் டைம்ஸ் உணவக விமர்சகர்களான பிரியா கிருஷ்ணா மற்றும் மெலிசா கிளார்க், ஆசிரியர் பிரையன் கல்லாகர் ஆகியோர் தொகுத்தனர். இந்த மூவரும் நகரம் முழுவதும் உள்ள 20,000க்கும் மேற்பட்ட உணவகங்களின் பிரமிக்க வைக்கும் தொகுப்பிலிருந்து இறுதி 100 பேரைத் தேர்ந்தெடுத்தனர்.