சோமாலியா கடற்கொள்ளையர்கள் Reuters
உலகம்

ஆயுத கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்.. சோமாலியா கடலில் அதிர்ச்சி! சிக்கிய 6 இந்தியர்களின் நிலை என்ன?

சோமாலியா கடற்பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தக் கப்பலில் இருந்த 10 பேர் கொண்ட குழுவில் 6 பேர் இந்தியர்கள் என தெரியவந்திருக்கிறது.

Premkumar S

சோமாலியாவின் தலைநகர் மொகதிசுவில் (Mogadishu) உள்ள துருக்கியின் ராணுவப் பயிற்சி மையத்திற்கு, கேமரூன் நாட்டின் கொடி ஏந்திய எம்/வி லுதூஃப் (M/V LUTUF) என்ற கப்பல் கடந்த வாரம் ஆயுதங்களை ஏற்றிச்சென்றது. இந்த நிலையில், அந்த கப்பல் ஆகஸ்ட் 17-ம் சோமாலியாவின் புண்ட்லாந்து மாகாணத்தின் எய்ல் கடற்கரை அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.

Ship

இந்தசூழலில் தான், கடத்தப்பட்ட லுதூஃப் கப்பல் குறித்து பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, இந்தக் கப்பலில் மொத்தம் 10 பேர் கொண்ட குழுவினர் இருந்த நிலையில், அவர்களில் 6 பேர் இந்தியர்கள் என சோமாலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கப்பலில் துருக்கி நாட்டைச் சேர்ந்த ராணுவ ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் செயற்கைக்கோள் உபகரணங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கப்பலை கடத்திய 8 கடற்கொள்ளையர்கள், அந்தக் கப்பலை சோமாலியாவின் கார்மால் கடற்கரை பகுதியை நோக்கி கொண்டு சென்றதாகவும், அப்போது துருக்கி பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும், 2 நாட்களுக்குப் பிறகு கடத்தப்பட்ட கப்பலை நோக்கி ஒரு சிறிய படகு சென்றதாகவும், அதில் இருந்த இருவர் கடற்கொள்ளையர்களுக்கு ‘காட்’ என்ற போதைத் தூண்டும் தாவரத்தை வழங்கியதாகவும், அந்தப் படகு கரைக்கு திரும்பிய பின்னர் அப்பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், அந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பதும், உயிரிழந்தவர்கள் கடற்கொள்ளையர்களுடன் தொடர்புடையவர்களா என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்தநிலையில் தான், கப்பலில் இருந்த 6 இந்தியர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் தெளிவான தகவல் வெளியாகவில்லை. இதனால், அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.