Singapore  web
உலகம்

இந்திய சமூகத்தினரைக் குறிவைக்கும் சமூக ஊடக பதிவுகள்.. முடக்க சிங்கப்பூர் அரசு உத்தரவு!

இந்திய சமூகத்தினரைக் குறிவைக்கும் அவதூறு பதிவுகளை நீக்குமாறு சிங்கப்பூர் அரசு சமூக ஊடக தளங்களுக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

PT WEB

இந்திய சமூகத்தினரை குறிவைத்து, சீனாவிலிருந்து உருவான அவதூறு பதிவுகள் சிங்கப்பூரின் பன்முக கலாச்சார மாதிரிக்கும் இன நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக அரசு கண்டித்துள்ளது. இதனைத் தடுக்க, இணையவழி குற்றவியல் தீங்கிழைப்புச் சட்டத்தின் கீழ் யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களில் உள்ள பதிவுகளை முடக்க காவல்துறை உத்தரவிட்டது.

இந்திய சமூகத்தை இலக்காகக் கொண்டதும், நாட்டின் பன்முக கலாச்சாரக் கோட்பாட்டை சீர்குலைக்கக்கூடியதுமான 14 பதிவுகளை முடக்குமாறு, சிங்கப்பூர் அரசாங்கம் சனிக்கிழமையன்று மூன்று சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூர் அரசு தனது பன்முக கலாச்சார மாதிரியைச் சீர்குலைக்கும் பதிவுகளை முடக்குமாறு சமூக ஊடக தளங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பதிவுகள் இன நல்லிணக்கத்திற்கும் பன்முக கலாச்சாரத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக சிங்கப்புர் அரசாங்கம் கூறியுள்ளது.

Social media

யூடியூப் (YouTube), ஃபேஸ்புக் (Facebook) மற்றும் எக்ஸ் (X) ஆகிய தளங்களில் உள்ள அப்பதிவுகளை நீக்குமாறு, இணையவழி குற்றவியல் தீங்கிழைப்புச் சட்டத்தின் (OCHA) கீழ் காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் (MHA) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இந்தியச் சமூகத்தினரைக் குறிவைத்துத் தீவிரமாகப் பரப்பப்பட்டு வரும் அவதூறுப் பதிவுகள் அனைத்தும் பெரும்பாலும் சீனாவிலிருந்து உருவானவை என்றும் இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் இன நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் வெளிநாட்டுச் சக்திகளால் பரப்பப்படும் இத்தகைய இனவாதக் கருத்துக்களைத் தங்களின் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று சிங்கப்பூர் உள்விவகார அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Singapore

இந்த சர்ச்சைக்குரிய பதிவுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அது சீனாவைச் சேர்ந்த ஒரு தளத்திலிருந்து உருவானதாகவும், பின்னர் பிற தளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் பகிரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக 'சேனல் நியூஸ் ஏசியா' (Channel News Asia) சனிக்கிழமையன்று வெளியிட்ட செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்; 15 சதவீதம் பேர் மலாய் இனத்தவர்; 7 முதல் 9 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். எஞ்சியவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தரவுகள் கூறுகிறது.