டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்றபோது, செலவுமிக்க மற்றும் அழிவுகரமான வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்காவின் தலையீட்டை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். ஆனாலும், அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்று ஓராண்டுக்குள் ஈரானின் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கிறார்.
உலக நாடுகளில் டிரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே பரவலான எதிர்ப்பு நிலவினாலும், அவரது நிர்வாகம் ஈரான் மற்றும் வெனிசுலா அரசாங்கங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதோடு, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் அமெரிக்கத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.
இந்த சூழலில், ஜனவரி 2025-ல் மீண்டும் பதவியேற்றதிலிருந்து டிரம்ப் வெளிநாடுகளில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.
ஈரான் : அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராகத் 2026 பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய இந்த போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதால் உக்கிரமடைந்தது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து, ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இப்போரினால் உலகளாவிய எண்ணெய் விலை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது
இந்த அமெரிக்கத் தாக்குதல்கள், ஜூன் 2025-ல் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய முந்தைய தாக்குதலை விட மிகவும் விரிவானதாகத் தோன்றுகின்றன. ஈரான் மீதான அமெரிக்காவின் இரண்டு தாக்குதல்களும் சர்வதேச சட்டத்தின்படி சட்ட விரோதமானவையாகக் கருதப்படுகின்றது.
வெனிசுலா : டொனால்ட் டிரம்ப் போதைப்பொருள் கடத்தல் மற்றும் எண்ணெய் நலன்களைக் காரணம் காட்டி ஜனவரி 2026-இல் வெனிசுலா மீது ராணுவத் தாக்குதல்களைத் தொடுத்தது, நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்த நிலையில், இராணுவத் தடையையும் ஏற்படுத்தியது
வெனிசுலா மீதான இந்த அமெரிக்கத் தாக்குதல், 2025-ல் தொடங்கிய பதற்றத்தின் உச்சகட்டமாகும், இதில் கரீபியன் பகுதியில் அமெரிக்க இராணுவ சொத்துக்கள் குவிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் வெனிசுலா மற்றும் கியூபா பாதுகாப்புப் படையினர் மற்றும் வெனிசுலா பொதுமக்கள் உட்பட 83 பேர் கொல்லப்பட்டனர் .
லத்தீன் அமெரிக்கா : டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், லத்தீன் அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் "நார்கோ டெரரிஸ்டுகளை" (narco-terrorists) ஒழிப்பதாகக் கூறி, படகுகள் மீது நடத்தப்பட்ட 47-க்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தல் என்பது அமெரிக்காவின் மீதான ஒரு ஆயுதத் தாக்குதலுக்குச் சமம் என்று கூறி, பல குற்றக் குழுக்களை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளனர்.
"Operation Southern Spear" என்ற பெயரில் நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள் வெனிசுலா, கரீபியன் கடல் மற்றும் பசிபிக் பகுதியில் உள்ள குடிமக்கள் படகுகளை இலக்கு வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
நைஜீரியா : டிரம்ப் நிர்வாகம் ஆப்பிரிக்காவில் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. 2025 டிசம்பர் இறுதியில், நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ISIS) பயங்கரவாதிகளுக்கு எதிராக டிரம்ப் உத்தரவின் பேரில் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
சோமாலியா : டிரம்ப் நிர்வாகம் சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் ஐஎஸ்ஐஎல்-இன் பிராந்தியக் கிளை அமைப்பு போன்ற ஆயுதக் குழுக்களை எதிர்கொள்வதற்காக, அது நீண்ட காலமாக அந்நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் சோமாலியாவில் அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களைப் பெருமளவில் அதிகரித்துள்ளது . 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கா குறைந்தது 111 தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த எண்ணிக்கை, ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் ஆகியோரின் நிர்வாகங்களின் கீழ் நடத்தப்பட்ட மொத்தத் தாக்குதல்களின் எண்ணிக்கையை விட அதிகம்
ஏமன்: காசா மீதான தனது இனப்படுகொலைப் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு வடிவமாக, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்க கடற்படை சொத்துக்களை குறிவைத்து ஹவுதிகள் தாக்குதல்களை நடத்தி வந்தனர் . அதற்கு பதிலடியாக 2025 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதத்திற்கு இடையில், அமெரிக்கா ராஸ் ஈசா துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இது ஒரு போர்க்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது .
சிரியா பலிம்ரா நகரில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு மொழி பெயர்ப்பாளரும் கொல்லப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா 2025 டிசம்பரில் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎல் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியது .