முகமது யூனுஸ், ஷேக் ஹசீனா x page
உலகம்

”வங்கதேசத்தை அமெரிக்காவிற்கு தாரைவார்த்துவிட்டார் யூனுஸ்” - ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!

வங்கதேச அரசின் தலைமை ஆலேசாகர் முகமது யூனுஸ் நாட்டையே அமெரிக்காவிற்கு விற்றுவிட்டதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

PT WEB

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா ஃபேஸ்புக் சமூக தளத்தில் ஆடியோ பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் வங்கதேசத்தின் செயின்ட் மார்ட்டின் தீவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபூர் ரகுமான் மறுத்தார் என்றும் இதன் காரணமாகவே அவர் தன் உயிரையும் பறிகொடுக்க நேர்ந்தது என்றும் கூறியுள்ளார். தனது தந்தையின் நிலைப்பாட்டையே தானும் கடைபிடித்ததாகவும் ஆட்சியில் தொடர்வதற்காக ஒருபோதும் நாட்டு நலனில் சமரசம் செய்துகொள்ளவில்லை என்றும் ஹசீனா தெரிவித்துள்ளார்.

யூனுஸ், ஹசீனா

நாட்டின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு தரக்கூடாது என்பதில் தங்கள் குடும்பம் உறுதியாக இருந்ததாகவும் ஆனால் அதற்கு எதிர்மாறாக முகமது யூனுஸ் நடந்துகொள்வதாகவும் ஹசீனா தன் பதிவில் தெரிவித்துள்ளார். வங்கதேசத்திற்கு சொந்தமான புவியியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த செயின்ட் மார்ட்டின் தீவில் அமெரிக்கா கடற்படை தளம் அமைக்க முயற்சி செய்து வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் உள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவின் விருப்பத்திற்கேற்ப முகமது யூனுஸ் நடந்துகொள்கிறார் என்ற ரீதியில் ஹசீனாவின் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் தலைமை ஆலோசகர் முகமது யூனுசுக்கும் ராணுவத்திற்கும் கருத்து முரண் தீவிரமடைந்து பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் ஷேக் ஹசீனா வெளியிட்டுள்ள பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.