பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சர்வதேச எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க பல கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். அரசு வாகனங்கள் இயக்கத்துக்கு தடை, வெளிநாட்டு பயணங்கள் ரத்து, சம்பளக் குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டு, அரசு அலுவலகங்கள் குறைந்த நாட்களில் செயல்படும். போரின் விளைவாக பாகிஸ்தான் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
செய்தியாளர் - விக்கி
ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. 2வது வாரமாக மாறி மாறி தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில், அதன் பாதிப்பு சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சில அதிர்ச்சி அறிவிப்புகளை சொந்த மக்களுக்கு வெளியிட்டுள்ளார்.
சர்வதேச எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அவர் பெரும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்தார். அரசு வாகனங்களை இயக்கக்கூடாது என அறிவித்த அவர், அரசு தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களையும் ரத்து செய்தார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "அரசுத் துறை வாகனங்களுக்கான எரிபொருள் பயன்பாடு அடுத்த இரண்டு மாதங்களுக்கு 50% குறைக்கப்படும். இருப்பினும், ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்துகளுக்கு இந்த எரிபொருள் குறைப்பு பொருந்தாது. மேலும், 60% அரசு வாகனங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இயக்கப்படாது.
அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு உதவியாளர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்குச் சம்பளம் இல்லை. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 25% சம்பளக் குறைப்பு இருக்கும். ரூ.3,00,000க்கும் மேல் வருமானம் பெறும் கிரேடு 20 மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு இரண்டு நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இந்த இரண்டு நாட்கள் சம்பளம் பொதுமக்களின் நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படும்.
சம்பளங்கள் தவிர்த்த அரசுச் செலவினங்களில் 20% குறைக்கப்படும். வாகனங்கள், தளவாடங்கள், ஏ.சி. உள்ளிட்ட பொருட்கள் கொள்முதலுக்கும் தடை விதிக்கப்படுகிறது. கூடுதலாக மத்திய, மாகாண அமைச்சர்கள், ஆலோசகர்கள், சிறப்பு உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்படும். பிரதமர் என்ற முறையில் எனது வெளிநாட்டுப் பயணங்களும் ரத்து செய்யப்படுகிறது. முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. தேசிய நலனுக்கான அத்தியாவசியப் பயணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பள்ளிகள் மூடப்படும் என்றும், அரசு அலுவலகங்கள் நான்கு நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் பிரதமர் ஷெரீப் அறிவித்தார். போர் காரணமாகக் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டதால் அவசர அவசரமாக இதுபோன்ற தடைகளை அறிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு. இந்த போரால் இதுபோன்ற தடைகளை அறிவித்த முதல் நாடு பாகிஸ்தானாகும்..
கடந்த வாரம் தான் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 55 ரூபாய் அதிகரிக்கப்பட்டன. அங்கு சமீப காலங்களில் ஒரே நேரத்தில் இந்தளவுக்கு பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளின் ஏற்ற இறக்கங்கள் குறித்து பாகிஸ்தான் அரசு முழுமையாக அறிந்திருக்கிறது என்றும், மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்