Modedl Image Google Gemeni
உலகம்

சிறுமி முதல் மூதாட்டி வரை.. உக்ரைன் போரில் 1,004 பாலியல் வன்முறைகள்.. ரஷ்யா மீது UN குற்றச்சாட்டு!

ரஷ்யா தனது ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு ஐநா பார்வையாளர்களை அனுமதிக்காததால், உண்மையான பாதிப்புகளின் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Prakash J

நேட்டோ நாடுகளில் இணையக்கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் போரில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பான அறிக்கை வெளியாகி உள்ளது. இதில், 89% பாலியல் வன்முறையை ரஷ்யா அரங்கேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ நாடுகளில் இணையக்கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் போர் தொடுத்தது. அது 4 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் போரில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் (OHCHR) அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

un human rights commission

பிப்ரவரி 2022 முதல் ஜூலை 2026 வரை பதிவான 1,004 உறுதிசெய்யப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், 89% பாலியல் வன்முறையை ரஷ்யா அரங்கேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க் கைதிகள் மற்றும் பிடித்து வைக்கப்பட்ட நபர்களை மிரட்டவும், வாக்குமூலம் பெறவும் பாலியல் வன்முறையை ஒரு திட்டமிட்ட ஆயுதமாக ரஷ்யப் படைகள் பயன்படுத்தியுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகளான ஆண்களே இத்தகைய பாலியல் சித்திரவதைகளுக்கும், பிறப்புறுப்புகளில் மின்சார அதிர்ச்சி அளிக்கும் கொடூரங்களுக்கும் அதிகளவில் ஆளாகியுள்ளனர். ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் 4 வயது சிறுமி முதல் 82 வயது மூதாட்டி வரை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

model image

கூட்டுப் பாலியல் வன்முறை, பழைய சோவியத் கால 'தாபிக்' (tapik) தொலைபேசி கருவிகள் மூலம் உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுதல் மற்றும் உடலியல் சிதைவு போன்ற செயல்களும் இதில் அடங்கும். ஐ.நா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா தனது ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு ஐநா பார்வையாளர்களை அனுமதிக்காததால், உண்மையான பாதிப்புகளின் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், உக்ரேனியப் படைகளால் ரஷ்யப் போர்க்கைதிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட எந்தச் சம்பவங்களையும் தாங்கள் ஆவணப்படுத்தவில்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.