தென்கிழக்கு ஸ்பெயினில் 'டானா' காரணமாக ஏற்பட்ட திடீர் பெருமழி, காஸ்டிலா-லா மன்சா பிராந்தியத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது. 102 வயது மூதாட்டி உயிரிழந்தார். வீடுகள், கார்கள் பாதிக்கப்பட்டன. வானிலை மையம் இதை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஏற்பட்டது என தெரிவித்தது.
தென்கிழக்கு ஸ்பெயினில் உள்ள காஸ்டிலா-லா மன்சா (Castilla-La Mancha) பிராந்தியத்தில் மட்ரிகுவேராஸ் (Madrigueras) என்ற சிறிய நகரம் அமைந்துள்ளது. சுமார் 4,760 மக்கள் மட்டுமே வாழும் அந்தச் சிறிய நகரத்தில் வெள்ளிக்கிழமையன்று திடீரென பெருமழை கொட்டித் தீர்த்தது.
ஒரு சதுர மீட்டருக்குச் சுமார் 142 லிட்டர் மழை பெய்த நிலையில், சிறிது நேரத்தில் அது பெருவெள்ளமாக உருவெடுத்து அங்கிருந்த வீடுகளுக்குள் பாய்ந்தது. குறுகிய நேரத்திலேயே நீர்மட்டம் சுமார் 1 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு உயர்ந்ததால் வீடுகளில் இருந்து ஏராளமானோர் தப்பிக்க வழியில்லாமல் தங்கள் வீடுகளிலேயே சிக்கிக்கொண்டனர்.
இந்த பெருவெள்ளம் குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு படையினர் அந்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
எனினும் வெள்ளம் காரணமாக வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் வெளியேறமுடியாமல் 102 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது. இதனிடையே அந்த பகுதியில் இருந்த கார்கள் இந்த வெள்ளத்தில் அடித்து ஒரே இடத்தில் மலைபோல குவிந்த வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நகரத்தில் குறைந்த அளவு மக்களே வசித்ததால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், வேறு முக்கிய நகரத்தில் இந்த அளவு மழை பெய்திருந்தால் அது பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
'டானா' (DANA - Depresión Aislada en Niveles Altos) எனப்படும் வளிமண்டலக் மேலடுக்கு சுழற்சி நிகழ்வே இந்த திடீர் பெருமழைக்கு காரணம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டலத்தின் உயர் அடுக்கில் உள்ள குளிர்ந்த காற்று, மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வரும் வெப்பமான மற்றும் ஈரப்பதம் நிறைந்த காற்றோடு மோதும்போது நடக்கும் நிகழ்வே 'டானா' விளைவு என அழைக்கப்படுகிறது. ஸ்பெயினில் இந்த நிகழ்வால் இதற்கு முன்னரும் பலமுறை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர ஸ்பெயினில் சமீபத்தில் கடுமையான கோடை வறட்சி நிலவியதால், நிலம் மிகவும் காய்ந்து கடினமாக மாறியிருந்தது என்றும், இதனால் தற்போது பெய்த அதிகப்படியான மழைநீரை நிலத்தால் உடனடியாக உறிஞ்ச முடியாமல், நீரெல்லாம் வழிந்தோடிப் பெரும் வெள்ளப்பெருக்காக மாறியது என்றும் பல்வேறு ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.