மிலோஸ் வுசெவிக் ராய்ட்டர்ஸ்
உலகம்

தொடர் போராட்டம் | செர்பியா பிரதமர் ராஜினாமா செய்ய முடிவு!

மக்களின் தொடர் போராட்டம் காரணமாக, செர்பிய பிரதமர் மிலோஸ் வுசெவிக் (Milos Vucevic) தனது பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

Prakash J

தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று, செர்பியா. இது, ருமேனியா, ஹங்கேரி, பல்கேரியா, அல்பேனியா, மெசடொனியா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. அதன் பிரதமராக மிலோஸ் வுசெவிக் (Milos Vucevic) உள்ளார். இந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

செர்பியா மக்கள் போராட்டம்

செர்பியாவின் வடக்கு நகரமான நோவிசாட்டில் உள்ள ரயில் நிலையத்தின் மேற்கூரை, கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி, பெயர்ந்து விழுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். அந்த ரயில் நிலையத்தில் நடந்த சீரமைப்புப் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக்கை கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்து அவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த நிலையில், செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வது எனது இறுதி முடிவு. இதுகுறித்து, இன்று காலை செர்பியா அதிபருடன் நான் நீண்ட நேரம் பேசினேன். பின்னர் எனது கருத்தை ஏற்றுக்கொண்டார். எனவே, விஷயங்களை மேலும் சிக்கலாக்குவதைத் தவிர்க்கும் வகையில், நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ராஜினாமாவை செர்பியா நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட பிறகு, அடுத்த 30 நாட்களுக்குள் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும் அல்லது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.