france child abuse  web
உலகம்

பள்ளிக்குழந்தைகள் மீது பாலியல் கொடூரம்.. அதிர்ச்சியில் பிரான்ஸ்!

பிரான்ஸ் நாட்டின் அரசு நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயிலும் மூன்று வயது குழந்தைகள் உட்பட பல சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

பிரான்ஸ் நாட்டில் அரசு நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகள் மீது நடந்த பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்கொடுமை சம்பவங்கள் அந்த நாட்டையே நிலை குலைய செய்துள்ளது. குறிப்பாக மூன்று வயது குழந்தைகள் கூட இந்த கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால், பெற்றோர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

france child abuse

பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் முழுவதும் உள்ள 84 ப்ரீஸ்கூல், சுமார் 20 தொடக்கப் பள்ளிகள் மற்றும் கிட்டத்தட்ட 10 பகல்நேரப் பராமரிப்பு மையங்களில் விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக அரசு வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாக 'தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் மதிய உணவு இடைவேளை, குழந்தைகள் தூங்கும் நேரம், பள்ளி முடிந்த பிறகான நேரங்களில் இந்த அத்துமீறல்கள் நடந்துள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை பள்ளிகள் மற்றும் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள பள்ளி ஊழியர்கள் செய்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அதிகாரிகளின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பாரிஸ் 78 உதவியாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது.

france child abuse

இது தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாரிஸ் நகரத்தின் தலைமை அரசு வழக்கறிஞரான லாரே பெக்குவா செய்தியாளர்களைச் சந்தித்த போது,” குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் நடந்ததாக கூறப்படும் ப்ரீஸ்கூல்கள், தொடக்கப் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக ஐந்து பேருக்கு நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் வெளிவருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தங்கள் குழந்தைகள் கடுமையான மன உளைச்சலின் அறிகுறிகளைக் காட்டியதாக பெற்றோர்கள் சாட்சியங்கள் அளித்துள்ளனர். மேலும், இந்த கொடூர நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து #MeTooEcoles என்ற கூட்டு அமைப்பை உருவாக்கியுள்ளனர். குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்த புகார்களைப் பள்ளி நிர்வாகமும் நகர அதிகாரிகளும் நீண்ட காலமாகப் புறக்கணித்து மூடி மறைக்க முயன்றுள்ளதாக இந்த அமைப்பின் இணை நிறுவனர் பர்கா செருவாலி குற்றம் சாட்டியுள்ளார்.