அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. பேச்சுவார்த்தை நடைபெறுமா?
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போரின் காரணமாக 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. போரை நிரந்தரமாக நிறுத்தும் பேச்சுவார்த்தைகளும் இழுபறியாகவே இருந்து வருகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தைகள் முடிவடைய இன்னும் சில நாட்கள் எடுக்கும் என்று கூறியுள்ளார். அதேநேரத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் நன்றாக முன்னேறி வருவதாக கூறியதோடு, அவை தோல்வியடைந்தால் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தை இழுபறிகளுக்கு மத்தியில் ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைத்துக் கொண்டிருந்த படகுகள் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து நமது படைகளைப் பாதுகாக்க, அமெரிக்கப் படைகள் தெற்கு ஈரானில் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தின என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அறிவித்தது.
அமெரிக்காவின் இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிய வான் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தை ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் வான் பாதுகாப்புப் பிரிவுகள் சுட்டு வீழ்த்தியது என்று கூறியுள்ளது. மேலும், ஒரு RQ-4 ஆளில்லா விமானம் மற்றும் F-35 போர் விமானம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அந்தப் பாதுகாப்புப் படை தனது செபா நியூஸ் இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
இந்தச் சூழலில் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இனி அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு கேடயங்களாக செயல்படாது என்று ஈத் அல்-அதா பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 28 அன்று தொடங்கி, வளைகுடா முழுவதும் பரவிய போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டு, ஈரானும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வரும் வேளையில், இந்த தாக்குதல்கள் குறித்த செய்திகளும் அறிக்கையும் வெளியாகியுள்ளது மக்களிடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

