riyadh, Saudi arabi reuters
உலகம்

சவுதி மண்ணுக்குள் புதைந்திருந்த பிரம்மாண்ட புதையல்.. உலகமே உற்றுநோக்கும் பின்னணி!

மதீனாவில் 11 கோடி டன் யுரேனியம் தாது கண்டுபிடிப்பு; எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து அணுசக்தி மையப்படுத்தும் சவுதியின் புதிய எரிசக்தி திட்டத்திற்கு வலுவான தளமா?

PT WEB

சவுதி அரேபியா மதீனாவில் சுமார் 11 கோடி டன் யுரேனியம் தாது இருப்பதாக அறிவித்துள்ளது. எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து விலகி, அணுசக்தி உள்பட பல்துறை எரிசக்தி கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்துக்கு இது முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தாதுவில் உள்ள யுரேனியத்தின் உண்மையான அளவு, செறிவு, உற்பத்திச் செலவு போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

செய்தியாளர் - M.மீரா

எண்ணெய் வளத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தில் இருந்து பல்வேறு துறைகளில் விரிவடைய சவுதி அரேபியா முயற்சித்து வரும் நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய அளவில் யுரேனியம் தாது இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், சுமார் 11 கோடி டன் யுரேனியம் தாது இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று சவுதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

Saudi Arabia

வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) 70-வது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சவுதி அரேபியா தொடர்ந்து யுரேனியம் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். உர உற்பத்தியின்போது துணைப் பொருளாக கிடைக்கும் யுரேனியத்தை மீட்டெடுக்கும் சாத்தியக்கூறுகளையும் அந்நாடு ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

புவியியல் ஆய்வுகள் மற்றும் கனிம வள ஆய்வுகளின் மூலம், சுமார் 110 மில்லியன் டன் தாது இருப்பது தெரியவந்துள்ளது என்றும் கனமான அரிய மண் தனிமங்கள் அதிக செறிவில் இருப்பதுடன், யுரேனியமும் நம்பிக்கைக்குரிய அளவில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Saudi Arabia

இந்த அறிவிப்பு, சவுதி அரேபியா தனது அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்து வரும் நேரத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை முக்கிய ஆற்றல் ஆதாரங்களாகக் கொண்டிருந்த சவுதி, எதிர்காலத்தில் அணுமின் உற்பத்தியையும் தனது எரிசக்தி கட்டமைப்பில் சேர்க்க திட்டமிட்டு வருகிறது.

அதே நேரத்தில், இந்த 11 கோடி டன் என்பது யுரேனியத்தின் அளவு அல்ல; யுரேனியம் அடங்கிய தாதுவின் மொத்த எடை என்பது முக்கியமானது. அந்த தாதுவில் எவ்வளவு அளவு யுரேனியம் உள்ளது என்பது குறித்து சவுதி அரசு இதுவரை தகவல் வெளியிடவில்லை.

யுரேனியத்தின் செறிவு, தாதுவின் தன்மை, அதை பிரித்தெடுக்கும் திறன், மீட்பு விகிதம் மற்றும் உற்பத்திச் செலவு போன்ற காரணிகளே இந்த வளத்தை வணிக ரீதியாக பயன்படுத்த முடியுமா என்பதை தீர்மானிக்கும். எனவே, தாது அளவு மட்டும் வைத்து சவுதியின் யுரேனியம் வளத்தின் உண்மையான பொருளாதார மதிப்பை தற்போது கணிக்க முடியாது.