\
Twist in the Ukraine War A Major Shock for Putin
Putin Reuters

புடினுக்கு வந்த பேரதிர்ச்சி.. உக்ரைன் போரில் திடீர் திருப்பம்!

டொனெட்ஸ்க் முனையில் ரஷ்யாவின் 51ஆவது ஒருங்கிணைந்த ஆயுதப்படையின் தளபதி மில்சகோவ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

செய்தியாளர் - M. மீரா

ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் 51-ஆவது ஒருங்கிணைந்த ஆயுதப்படையின் (51st Combined Arms Army) தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் செர்கெய் மில்சகோவ் (Sergei Milchakov) உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய ராணுவத்தின் கட்டளை மையங்களைக் குறிவைத்து உக்ரைன் துல்லியத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அந்தத் தாக்குதலில்தான் மில்சகோவ் கொல்லப்பட்டிருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ukraine war
Ukraine war Reuters

ஆகஸ்ட் 27-ஆம் தேதி உக்ரைன் ராணுவத்தின் பொதுப் பணியகம் இந்தத் தாக்குதலை உறுதி செய்திருந்தது. அப்போது உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, டொனெட்ஸ்க் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய ராணுவ கட்டளை மையங்கள் துல்லியமான தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ரஷ்ய ராணுவ அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள ’கடுமையான இழப்புகள்’ குறித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தது.

Twist in the Ukraine War A Major Shock for Putin
முதல் Sketch கப்பல்.. தொட்டதால் கெட்ட ரஷ்யா.. நசுக்கத் தொடங்கும் நார்வே!

மில்சகோவின் மரணம் குறித்த தகவலை ரஷ்ய ஊடகமான Vazhniye Istorii வெளியிட்டுள்ளது. இந்த மரணம் உறுதி செய்யப்பட்டால், உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய ஜெனரல்களின் எண்ணிக்கை 23 ஆக உயரும் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும், மில்சகோவின் மரணத்தை ரஷ்ய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

Ukraine war
Ukraine war reuters

டொனெட்ஸ்க் பகுதி ரஷ்யாவின் முக்கியப் போர் இலக்குகளில் ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறது. மில்சகோவின் தலைமையிலான படைகள் அவ்திவ்கா, நியூயார்க் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் அவருக்கு ’Hero of Russia’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2022-ஆம் ஆண்டு மில்சகோவ் 1st Donetsk Army Corps-இன் தளபதியாகப் பொறுப்பேற்றார். அப்போது அந்தப் படைப்பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ், போபாஸ்னா அருகே நடைபெற்ற போரில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மில்சகோவ் அந்தப் பொறுப்பை ஏற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்தப் படைப்பிரிவு மறுசீரமைக்கப்பட்டு 51st Combined Arms Army ஆக மாற்றப்பட்டது.

மில்சகோவின் மரணம் உறுதி செய்யப்பட்டால், டொனெட்ஸ்க் முனையில் ரஷ்யாவின் கட்டளை அமைப்புக்கு இது குறிப்பிடத்தக்க பின்னடைவாக அமையக்கூடும்.

Twist in the Ukraine War A Major Shock for Putin
18 நாட்களிலேயே முடிவு.. கடலுக்கு அடியில் தங்கச் சுரங்கம்.. சீனாவுக்குக் கிடைத்த பெரிய புதையல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com