ஏமனில் ஹவுதிகளின் தாக்குதலால் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு நிலைமை சிக்கலாகியுள்ளது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அதிகரித்து வரும் அச்சுறுத்தலால் பாதுகாப்பான அரண்மனைகளுக்கு இடையே மாறிமாறி தங்குகிறார். விமான நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
செய்தியாளர் - M.மீரா
ஏமனில் ஈரான் ஆதரவுப் பெற்ற ஹவுதி அமைப்புக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. சர்வதேச கடல்வழிப் பாதையான செங்கடல் பகுதியை ஹவுதி கைப்பற்றியிருக்கும் நிலையில், அதனை மீட்கும் முயற்சியில் ஏமன் அரசுப் படைகளுடன் இணைந்து சவூதி அரேபியா படைகளும் ஹவுதி மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேசமயம், ஹவுதிக்கள் சவூதி அரேபியாவின் பல முக்கிய விமான நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் பல முறை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர் . 3ஆவது முறை நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நடந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
தாக்குதலுக்குப் பிறகு, சவூதி அரேபியாவின் பாதுகாப்பு நிலைமை குறித்த கவலை அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பலத்த பாதுகாப்பு கொண்ட, பதுங்குக்குழிகள் வசதியுள்ள அரண்மனைகளுக்கு இடையே மாறிமாறித் தங்குவதாக wall street journal வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது. .
இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினரின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்கள்தான்.
சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மட்டுமின்றி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பரந்த நிலப்பரப்பில் உள்ள அனைத்து முக்கிய இடங்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாதுகாப்பது சவாலாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய சூழலில், பட்டத்து இளவரசரின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக, அவரை ஒரே இடத்தில் தொடர்ந்து தங்க வைக்காமல், பதுங்குக் குழிகள் கொண்ட பாதுகாப்பான அரண்மனைகளுக்கு இடையே அழைத்துச் செல்வதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவருடன் அவருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாப்புக் குழுவினரும் இருப்பதாக wall street journal செய்தி குறிப்பிடுகிறது.
அவர் எந்தெந்த அரண்மனைகளில் தங்கியுள்ளார், எப்போது இடம் மாறுகிறார், தற்போது எங்கு இருக்கிறார் போன்ற குறிப்பிட்ட விவரங்கள் பொதுவெளியில் உறுதிப்படுத்தப்படவில்லை.
முகமது பின் சல்மான், சவூதி அரேபியாவின் எண்ணெய் வருவாயை மட்டுமே நம்பியிருக்கும் நாடு ஆகும். இந்த பொருளாதாரத்திலிருந்து சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச முதலீடுகளைச் சார்ந்த பொருளாதாரமாக மாற்ற முயன்று வருகிறார். ஆனால், தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. .
மேலும், ஏவுகணைகளை இடைமறிக்கும் பாதுகாப்பு ஆயுதங்களின் இருப்பு குறைந்து வருவதாகவும், முக்கிய உள்கட்டமைப்புகளையும் அரச குடும்பத்தினரின் இருப்பிடங்களையும் ஒரே நேரத்தில் பாதுகாப்பதில் சவால்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..
முக்கியமாக, பட்டத்து இளவரசர் அரண்மனைகளை மாற்றித் தங்குவதாக வெளியான தகவல், அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தலின் தீவிரத்தைக் காட்டுகிறது.