SOUDI REUTERS
உலகம்

கணவன் மனைவிக்கு ம*ண தண்டனை? சவுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்? விவாதமாவது ஏன்?

முத்தம் கொடுத்ததற்காகத் சவுதியில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் என்ன நடந்தது? இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கான காரணம் என்ன? என்பதைப் பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பாசிர். 22 வயதான இவர், சவுதி அரேபியாவின் புனித நகரமான மக்கா பகுதியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர், வங்கதேசத்தைச் சேர்ந்த சித்தி அக்தர் என்ற பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் மக்கா பகுதியில் உள்ள மசூதிக்குள் தகாத செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, சவுதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 14-ம் தேதி இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகச் சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

BANGALDESH

வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரும் மசூதியின் புனிதத்தன்மையை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதாகவும், நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர், நீதித்துறை அதிகாரிகள் தண்டனையை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, அரசின் உத்தரவின்பேரில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இருவரும் முத்தம் கொடுத்ததற்காகவே மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றம் என்ன? எந்த மசூதியில் குற்றம் நடந்தது? என்பதைச் சவுதி அதிகாரிகள் தங்களது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

இந்த மரண தண்டனை தற்போது விவாதமாக மாறியிருப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகத் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று வங்கதேசத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வங்கதேச அரசு சார்பில் சவுதி அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

MAKKA

இதற்கிடையே, இருவரும் கடந்த 2023-ம் ஆண்டே கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்துல் பாசிரின் குடும்பத்தினர் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை தங்களது மகன் தொலைபேசியில் பேசியதாகத் தெரிவித்துள்ளனர். அப்போது, தண்டனைக் காலம் முடிவடைந்ததும் தன்னை விடுவித்துவிடுவார்கள் என்று அவர் நம்பிக்கையுடன் கூறியதாகவும், தனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மசூதியின் புனிதத்தன்மையை மீறியதாகக் கூறப்படும் குற்றத்துக்காக இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேசமயம், உண்மையில் என்ன நடந்தது, இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக குடும்பத்தினருக்கும் தூதரகத்துக்கும் ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.