china
china twitter
உலகம்

மீண்டும் அணு ஆயுத சோதனை? சீனாவின் ‘சீக்ரெட்’டை கண்டுபிடித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

Prakash J

நம் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, அவ்வபோது அமெரிக்காவையே அச்சுறுத்தி வருகிறது. இருநாடுகளிடையே பனிப்போர் நிலவிவரும் நிலையில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்காவும், அந்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் சீனாவும் பல விஷயங்களில் முரண்டுபிடித்து வருகின்றன. தவிர, நம் நாட்டுடன் அருணாச்சல பிரதேசத்துக்கும் உரிமை கொண்டாடி வருகிறது சீனா.

china

இப்படியான சூழ்நிலையில், சீனா மீண்டும் அணுஆயுத சோதனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான இடத்தை சீனா ரகசியமாக உருவாக்கி வருவதாகவும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அணு ஆயுதங்கள் ஆபத்தானவை என்பதாலேயே அதுகுறித்த அச்சம், உலக நாடுகளில் அதிகரித்து வருகிறது. அணு ஆயுத தாக்குதலை எந்தவொரு நாடு ஆரம்பித்தாலும் அது பூமியின் அழிவாக இருக்கலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அணு ஆயுத சோதனைகளை, சீனா நடத்தத் திட்டமிட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த தகவலை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இதையும் படிக்க: மகளின் நோட் பேப்பரில் ராஜினாமா எழுதி அனுப்பிய உயர் அதிகாரி... வைரலாகும் புகைப்படம்!

அதில், சீனாவின் சின்ஜியாங்கில் இருந்து தக்லமாகன் மற்றும் கும்டாக் பாலைவனத்துக்கு இடையே இந்த லோப்நூர் பகுதியில் அணுஆயுத சோதனை நடத்த வசதியாக 60 அடி ஆழத்தில் பல இடங்களில் துளைகள் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்விடத்தில்தான் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு சீனா தனது முதல் அணுகுண்டை சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அப்பகுதியில் அணுஆயுத சோதனைகளை நடத்துவதற்கு சீனா தயாராகிவருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதாவது லோப்நூர் பகுதியில் எடுக்கப்பட்ட சேட்டிலைட் போட்டோக்கள் இதனை உறுதி செய்துள்ளன.

அதன்படி லோப்நூர் பகுதியில் பல்வேறு கட்டுமானங்களும், ஆழமான துளைகள் இருப்பதும் உறுதியாகி உள்ளது. இதுமட்டுமின்றி புதிய சாலைகளும் அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியில் ஒரு புதிய விமானத் தளம் கட்டப்படுவதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இதுதொடர்பாக பல ஆண்டுகளாக அமெரிக்க கண்காணித்து வந்த நிலையில், தற்போது அதை உறுதிசெய்துள்ளது. மேலும் அங்குள்ள கட்டமைப்புகள் அடிப்படையில் பார்த்தால் சீனா அணுஆயுதங்களில் நவீனமயமாக்கும் முயற்சியில் இறங்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: பாகிஸ்தான்: 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன்.. யாசகம் பெற்ற நிலையைக் கண்டு அதிர்ந்த தாய்!

இதனை, அமெரிக்க பெண்டகனின் நேஷனல் ஜியோஸ்பேஷியல்-இன்டெலிஜென்ஸ் ஏஜென்சியின் முன்னாள் ஆய்வாளரான ரென்னி பாபியார்ஸ் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து வல்லுநர்கள், “சேட்டிலைட் புகைப்படங்களின் ஆதாரங்கள் என்பது சீனா மீண்டும் அணுஆயுத சோதனைகளை நடத்துவதற்கு தயாராகி வருவதை உறுதி செய்கிறது. இது உலக நாடுகள் இடையே அணுஆயுதங்கள் சார்ந்த போட்டியை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் பகுதியில் எடுக்கப்பட்டுள்ள இப்புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாவதுடன், உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. எனினும், இதுகுறித்து சீனா எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை. அந்நாடு இந்த விஷயத்தில் அமைதி காப்பதால் உலக நாடுகளிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: புயல் தாக்கி 59 ஆண்டுகளுக்கு பிறகு, தனுஷ்கோடியில் புதிய ரயில் பாதை! அதிகாரிகள் ஆய்வு...