Stealth Jet X
உலகம்

எல்லையில் ஸ்டெல்த் விமானங்களை குவித்த சீனா.. லடாக்கில் மீண்டும் பதற்றம்!!

இந்தியா - சீனா எல்லைக் கோட்டிற்கு அருகே, சீனா தனது அதிநவீன J-20 ஸ்டெல்த் போர் விமானங்களை அதிக அளவில் நிலைநிறுத்தியிருப்பது புதிய செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.

Premkumar S

இந்தியாவின் வடக்கு எல்லைக்கு அருகே சீனா தனது 11, J-20 மைட்டி டிராகன் விமானங்களை நிறுத்தியுள்ளது. ஜூன் மாத இறுதி மற்றும் ஜூலை மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி, சின்ஜியாங்கில் உள்ள ஹோட்டான் விமானத் தளத்தில் 7 J-20 விமானங்களும், திபெத்தில் உள்ள டாம்சுங் விமானத் தளத்தில் 4 J-20 விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 11 J-20 விமானங்கள் இந்திய எல்லைக்கு அருகே இருப்பது, இதுவரை பொதுவெளியில் பதிவான மிகப்பெரிய விமான குவிப்பாகக் கருதப்படுகிறது.

J-20 - மைட்டி டிராகன்

இந்த நடவடிக்கை, எல்லைப் பகுதிகளில் சீனா தனது வான்படை திறன்களை தொடர்ந்து வலுப்படுத்தும் முயற்சியாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியாவிடம் தற்போது 5-ம் தலைமுறை ஸ்டெல்த் ரக போர் விமானங்கள் எதுவும் இல்லாத சூழலில், இந்தியாவும் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள், முன்கூட்டிய எச்சரிக்கை திறன்கள், மின்னணு போர் அமைப்புகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

J - 20 ஸ்டெல்த் போர் விமானங்கள்

சீனாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான J-20, ரேடார்களில் எளிதில் கண்டறிய முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரியின் வான் பாதுகாப்பில் ஊடுருவி, முக்கிய இலக்குகளை முதலில் தாக்கி, அதன் பிறகு வரும் மற்ற விமானங்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குகின்றன. மேலும், இது பாதுகாப்பாக திரும்பும் திறன் கொண்டவை. நவீன போர்களில் ஸ்டெல்த் போர் விமானங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.