Drone Reuters
உலகம்

கசிந்தது ரஷ்யாவின் ரகசிய Plan? Hit List-க்குள் வரும் நாடுகள்? வெளியான அதிர்ச்சி தகவல்!

ரஷ்யா-உக்ரைன் போர் ஒரு கட்டத்தில் முடிந்துவிடும் என்று நினைத்தவர்களுக்கு இப்போது வந்து விழுந்திருக்கிறது ஓர் அதிர்ச்சித் தகவல், அது என்னவென்று பார்க்கலாம்.

PT WEB

ரஷ்யா பெலாரஸ் மற்றும் உக்ரைன் எல்லைகளில் 10 ரகசிய ட்ரோன் தளங்களை அமைத்து, 59 ஏவுதளங்கள் மூலம் போலந்து, லிதுவேனியா, லாட்வியா உள்ளிட்ட NATO நாடுகளை தாக்குதல் வரம்புக்குள் கொண்டுவந்துள்ளதாக கசிந்த ஆவணங்கள், செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன. நீளமான புதிய தடங்கள் நீண்டதூர ட்ரோன்களுக்கு வழிவகுக்க, ஒரே நேரத்தில் ஆயிரம் ட்ரோன்கள் சேமிக்கும் வசதிகளும் உருவாகியுள்ளன.

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

பெலாரஸ் மற்றும் உக்ரைன் எல்லைகளை ஒட்டி ரஷ்யா 10 ரகசிய ட்ரோன் தளங்களை அமைத்துள்ளது, அவற்றில் 59 ஏவுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தளங்கள் மூலம் போலந்து, லிதுவேனியா, லாட்வியா உள்ளிட்ட பல NATO நாடுகள் ரஷ்ய ட்ரோன்களின் தாக்குதல் வரம்புக்குள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Drone

செயற்கைக்கோள் படங்கள் மற்றும் கசிந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்தத் பகுதிகளில் குறைந்தது 59 புதிய ஏவுதளங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. ஓடுபாதைக்கு பதிலாக நிலையான இறக்கைகள் கொண்ட ட்ரோன்களை புறப்படச் செய்ய பயன்படுத்தப்படும் இயந்திர வழிகாட்டித் தடங்களே இவை.

இந்த 59 தடங்களில் சுமார் 20 தடங்கள் புதிதாக அமைக்கப்பட்டவை என்றும், அவை வழக்கத்தைவிட நீளமாக இருப்பதால் ரஷ்யாவின் புதிய நீண்டதூர தாக்குதல் ட்ரோன்களை ஏவுவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்றும் ட்ரோன் உளவுத்துறை நிறுவனமான DroneSec தெரிவித்துள்ளது.

பெலாரஸ், போலந்து, லிதுவேனியா, லாட்வியா ஆகிய மூன்று NATO நாடுகளுடன் எல்லையைப் பகிர்கிறது. அதேபோல், உக்ரைன் ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா ஆகிய NATO நாடுகளுடன் எல்லையைப் பகிர்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அதிக ஆபத்தில் இருந்தாலும், ரஷ்ய ட்ரோன்கள் பிரிட்டன் கடற்கரை வரையிலும் சென்றடையக்கூடும் என ரஷ்யா கூறி வருகிறது.

Drone

இந்த தளங்களில் சில ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, உக்ரைன் மீது கிட்டத்தட்ட தினசரி வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நேரத்தில் சுமார் 1,000 ட்ரோன்களை சேமிக்கும் திறன் கொண்ட வசதிகளும் அதிகரித்துள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

ரஷ்யா தனது ட்ரோன் வலையமைப்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளதாக DroneSec நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மைக் மோன்னிக் தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்களை ஏவுவதுடன், அவற்றை இடைமறிப்பது கடினமாகும் வகையிலும் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உக்ரைனைத் தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.