destroyed russian armoured vehicle  web
உலகம்

உக்ரைன் போர் | மடியும் ரஷ்ய ராணுவ வீரர்கள்.. போரை நிறுத்துவாரா புதின்?

உக்ரைன் போரில் வரலாறு காணாத அளவில் ரஷ்யா வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

உக்ரைன் மீது 2022 முதல் நடைபெறும் ரஷ்யா படையெடுப்பில் இருதரப்பிலும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் உயிரிழப்பு, காயம், காணாமல் போதல் உள்ளிட்டவற்றால் இழப்பைச் சந்தித்துள்ளனர். இதில் ரஷ்யா மட்டும் 4 முதல் 4.5 லட்சம் வீரர்களை இழந்ததாக CSIS மதிப்பிடுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பெரும் இழப்புகள் ரஷ்ய ராணுவத்தின் போர்த்திறனை கடுமையாகப் பாதித்துள்ளன.

செய்தியாளர் ; M. மீரா

2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் இடையே போர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், 20 லட்சத்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிரிழப்பு அல்லது காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று சர்வதேச பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் ரஷ்யாவின் படைகளே அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளன.

destroyed russian armoured vehicle

பிப்ரவரி 2022-இல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது முதல், உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் என மொத்தம் 14 லட்சம் ராணுவத்தினர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 லட்சம் முதல் 4,50,000 வரையிலான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வியூக மற்றும் சர்வதேச ஆய்வு மையம் (CSIS) மையம் மதிப்பிட்டுள்ளது. கடந்த 1 மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 35,000 ராணுவ வீரர்களை இழந்துள்ளது ரஷ்யா என அது தெரிவிக்கிறது.

மேலும், இதே காலகட்டத்தில் உக்ரேனிய படைகளில் 5,25,000 முதல் 6,25,000 ராணுவத்தினர் மொத்த உயிரிழப்பு மற்றும் காயமடைந்துள்ளனர். உக்ரேனியப் படைகள் 1,25,000 முதல் 1,50,000 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா பங்கேற்ற அனைத்துப் போர்களிலும் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளைவிட, உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் நான்கு மடங்குக்கும் அதிகமாகும் என்று இந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

destroyed russian tank

உக்ரைன் எல்லையில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், குறுகிய காலத்திற்குள் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தும் படுகாயமடைந்தும் உள்ளனர். இந்தப் பெரும் இழப்பு ரஷ்ய ராணுவத்தின் போரிடும் திறனைப் பெரிதும் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் ராணுவம் பயன்படுத்தி வரும் நவீன உத்திகள் மற்றும் துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களே ரஷ்யாவில் வரலாறு காணாத உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, உக்ரைனின் நடுத்தர மற்றும் நீண்ட தூர ட்ரோன் (Drone) தொழில்நுட்ப முன்னேற்றங்கள், ரஷ்யாவின் மிக எளிதாகக் குறிவைத்து அழித்து வருகின்றன. ரஷ்யாவின் பெரும்பாலான மனிதவள இழப்புகளுக்கு இந்த ட்ரோன் தாக்குதல்களே முதன்மைக் காரணம் என்று ராணுவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Ukraine war

போரின் தீவிரத்தால் ரஷ்யாவின் உள்நாட்டுப் பொருளாதாரமும், ராணுவப் பாதுகாப்பும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. மேலும், ராணுவ வீரர்களின் தொடர் உயிரிழப்புகள் மாஸ்கோவிற்கு பெரும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் எல்லையைத் தாண்டி ரஷ்யாவின் உள்நாட்டுப் பகுதிக்குள் இருக்கும் முக்கிய ராணுவத் தளவாட உற்பத்தி ஆலைகளையும் உக்ரைன் தற்போது குறிவைத்துத் தாக்கி வருகிறது. இதனால் இந்த நீண்டகாலப் போரைத் தொடர்ந்து நடத்துவதில் புதின் நிர்வாகத்திற்குப் பல நடைமுறைச் சிக்கல்கள் உருவாகியுள்ளது.