செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்
அண்டார்டிகாவில் சுமார் 15 லட்சம் ஆண்டுகள் பழமையான பனிக்கட்டிகளைத் தேடும் ஆய்வுப் பணியில் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட உள்ளனர். இந்தப் பனிக்கட்டிகளை ஆய்வு செய்வதன் மூலம், பண்டைய காலத்தில் பூமியின் வளிமண்டலத்தில் இருந்த பசுமை இல்ல வாயுக்களின் (Greenhouse Gases) அளவைக் கண்டறியவும், தற்போதைய காலநிலை மாற்றக் கணிப்புகளின் துல்லியத்தைச் சரிபார்க்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் ஆராய்ச்சி நிறுவனத்தைச் (AARI) சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். பனிக்கட்டிகளுக்குள் காற்றுக் குமிழ்களாகப் (Air bubbles) பாதுகாக்கப்பட்டிருக்கும் வளிமண்டலத்தின் தடயங்கள், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சுற்றுச்சூழல் மற்றும் வெப்பநிலை குறித்த தகவல்களை வழங்கும்.
இதுகுறித்து AARI இயக்குநர் அலெக்சாண்டர் மகரோவ் (Aleksander Makarov) கூறுகையில், சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு (CO₂) அளவு தற்போதைய அளவைவிட அதிகமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அண்டார்டிகாவில் பனிப்படலம் இல்லை. மேலும், கடல் மட்டம் இன்றைய அளவைவிட சுமார் 65 மீட்டர் உயரமாக இருந்தது என்றார்.
குறிப்பாக, பூமியின் காலநிலை வரலாற்றில் பனிப்பாறைகள் உருவாகும் மற்றும் உருகும் சுழற்சிகளில் (Glacial Cycles) முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்ட காலகட்டத்தை இந்த ஆய்வு மையமாகக் கொண்டுள்ளது. பனிக்கட்டிகளுக்குள் சிக்கியிருக்கும் வாயுக்களின் அளவை ஆய்வு செய்வதன் மூலம், கடந்த காலங்களில் பூமியின் காலநிலை எவ்வாறு மாறியது என்பதையும், அந்த மாற்றங்களுக்கான காரணங்களையும் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ரஷ்ய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அலெக்சாண்டர் கோஸ்லோவ் கூறுகையில், இந்த ஆய்வு பூமியின் காலநிலை பல மில்லியன் ஆண்டுகளாக எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் என்றார். மேலும், இயற்கையான காலநிலை மாற்றங்களின் எல்லைகளையும் கண்டறிய முடியும் எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே, ரஷ்ய விஞ்ஞானிகள் சுமார் 12 லட்சம் ஆண்டுகள் பழமையான பனிக்கட்டிகளைச் சேகரித்து ஆய்வு செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது 15 லட்சம் ஆண்டுகள் பழமையான பனிக்கட்டிகளைத் தேடும் புதிய ஆய்வுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பூமியின் காலநிலை வரலாற்றைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் காலநிலை எப்படி இருந்தது? அதில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு என்ன காரணம்? போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் இந்த ஆய்வு, எதிர்காலத்தில் காலநிலை மாற்றங்களை இன்னும் துல்லியமாகக் கணிக்க உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அண்டார்டிகாவின் பனிக்கட்டிகளுக்குள் புதைந்திருக்கும் பூமியின் கடந்தகால ரகசியங்கள் விரைவில் வெளிவருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.