\
hunger
hungerREUTERS

உலகை அச்சுறுத்தும் பசி பஞ்சம்! 16 நாடுகளில் அதிகரிக்கும் அபாயம்! எல் நினோவால் அடுத்த நெருக்கடி!

உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்கெனவே உணவுப் பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பசி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்கெனவே உணவுப் பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பசி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. அப்படி எந்தெந்த நாடுகளில் உணவுப் பஞ்ச அபாயம் அதிகரித்துள்ளது? இதற்கு என்ன காரணம்? எல் நினோவால் நிலைமை எந்த அளவுக்கு மோசமடையும்? விரிவாகப் பார்க்கலாம்...

el nino
el ninoreuters

உலக நாடுகளில் நிலவும் உணவுப் பாதுகாப்பு நிலவரத்தைக் கண்காணித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து புதிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளன. டிசம்பர் 2026 முதல் 2027 மே மாதம் வரையிலான காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், உலகின் 16 பகுதிகளில் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் 13 பகுதிகள் மட்டுமே பசி அபாயம் அதிகமுள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் சூடான், தெற்கு சூடான், சோமாலியா, வடக்கு நைஜீரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் மிகவும் மோசமான உணவுப் பஞ்ச அபாயத்தை எதிர்கொள்ளும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கு முக்கியக் காரணமாக உள்நாட்டுப் போர்கள், ஆயுத மோதல்கள், மக்கள் இடம்பெயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும் மற்றொரு முக்கியக் கவலையாக எல் நினோ காலநிலை நிகழ்வு உருவெடுத்துள்ளது. ஏற்கெனவே உலகின் பல்வேறு பகுதிகளில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தி வரும் எல் நினோ, தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையும், கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மிகக் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், விவசாயப் பயிர்கள் சேதமடைவதுடன், கால்நடை வளர்ப்பு மற்றும் உணவு உற்பத்தியும் பாதிக்கப்படலாம். ஏற்கெனவே உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு இந்த வானிலை மாற்றங்கள் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

UN
UNREUTERS

இதற்கிடையே, உணவுப் பஞ்சத்தைத் தடுப்பதற்கான சர்வதேச நிதியுதவியும் 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உணவுப் பொருட்களை வழங்குவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மற்றும் பஞ்சத்தின் தீவிரத்தைக் கண்காணிப்பதற்கான ஆய்வுகளும் பாதிக்கப்படுவதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இவ்வாறு, போர், பொருளாதார நெருக்கடி, சர்வதேச நிதியுதவிக் குறைவு மற்றும் எல் நினோவால் ஏற்படக்கூடிய தீவிர வானிலை மாற்றங்கள் எனப் பல்வேறு காரணங்களால் உலகின் 16 பகுதிகளில் உணவுப் பஞ்ச அபாயம் அதிகரித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.