விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் Pt web
உலகம்

ரஷ்யா | ஹெலிகாப்டர் விபத்தில் பிரபல தொழிலதிபர் உட்பட 2 பேர் பலி!

ரஷ்யாவின் உரல் மலைப்பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், பிரபல ரஷ்ய கோடீஸ்வரரும், டாட்ரான்ஸ்காம் என்ற போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளருமான இலியாஸ் கிமதுடினோவ் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

PT WEB

ரஷ்யாவின் பெர்ம் பகுதியில் உள்ள அஷாத்லி பூங்கா என்ற சுற்றுலாத் தலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ரஷ்ய தொழிலதிபர் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். ராபின்சன் R44 ரகத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் மிகத் தாழ்வாகப் பறந்தபோது, அங்கிருந்த ஸ்கை லிஃப்ட் எனப்படும் கேபிள்களில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் பனிப்பொழிவுக்கு இடையே விழுந்து நொறுங்கியது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

இந்த விபத்தில் இலியாஸ் கிமதுடினோவ் (41) மற்றும் அதே நிறுவனத்தின் இயக்குநரான எல்மிர் கொன்யாகோவ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இலியாஸ் கிமதுடினோவ் நடத்தி வந்த டாட்ரான்ஸ்காம் நிறுவனம், ரஷ்யாவின் எரிசக்தி ஜாம்பவான்களான காஸ்ப்ரோம் மற்றும் ரோஸ்நெஃப்ட் ஆகிய நிறுவனங்களுக்குப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் முக்கிய நிறுவனமாகும். கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம், சுமார் 37 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், இந்த ஹெலிகாப்டர் பயணம் முறையான அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது. விபத்து நடந்தபோது அங்கு நிலவிய வானிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.