அமெரிக்கா கியூபாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்க, ரஷ்யா அதற்கு எதிராக ராணுவ உதவியை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. கியூபாவின் உள்நாட்டில் தலையீடு செய்ய முடியாது என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அவரது வீட்டுக்குள் புகுந்து அமெரிக்க டெல்டா படையினர் சிறைபிடித்தனர். தொடர்ந்து வெனிசுலாவின் கச்சா எண்ணெய் கட்டுப்பாட்டை அமெரிக்கா கையகப்படுத்திக்கொண்டது.
இந்த நிகழ்வுக்கு பின்னர் டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான கிரீன்லாந்தை சொந்தமாக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ஆனால் டென்மார்க் நாட்டுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் திரண்ட நிலையில், அதன் பின்னர் அது போன்ற கருத்துக்களை கூறுவதில் இருந்து டிரம்ப் பின்வாங்கியுள்ளார்.
எனினும், தற்போது ஈரான் மீது கவனம் செலுத்தும் டிரம்ப், இஸ்ரேலின் உதவியோடு அங்கு பெரும் தாக்குதலை நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய ட்ரம்ப், அமெரிக்கா தனது கவனத்தை கியூபாவுக்குத் திரும்புவது என்பது காலத்தின் கட்டாயம் என்று கூறியிருந்தார்.
இதனால் கியூபா மீது அமெரிக்கா படையெடுக்கப்போகிறதா என்ற அச்சம் எழுந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் தற்போது ரஷ்யா வெளிப்படையாகவே களமிறங்கியுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் சார்பில் வெளியான அறிக்கையில், தனி இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதையும், மிரட்டுவதையும் ஏற்க முடியாது என்றும் கியூபாவின் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஷ்யா வெறும் வார்த்தைகளோடு நிற்காமல், கியூபாவிற்குத் தேவையான நிதி உதவி மற்றும் பொருள் உதவிகளைவழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யா மற்றும் கியூபா இடையே கையெழுத்தான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அவர் சுட்டிக்காட்டி கியூபாவுக்கு உதவவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு நெருங்கிய நட்பு நாடாக இருந்த வெனிசுலா, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது ரஷ்யா ராணுவ ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் கியூபா விவகாரத்தில் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.