உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தை  முகநூல்
உலகம்

போருக்கு முடிவு காண தயார்... பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப்; இரு நாடுகளும் விதித்த நிபந்தனைகள் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் நேற்றிரவு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொலைபேசியில் உரையாடினர்.

PT WEB

ஜி.எஸ். பாலமுருகன்.

உக்ரைன் போருக்கு முடிவு காணத் தயார் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான உரையாடலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார். ஆனால், முக்கியமான சில நிபந்தனைகளையும் அவர் விதித்துள்ளார். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் நேற்றிரவு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைனில் தொடர்ந்து நீடித்து வரும் யுத்தத்தை விரைவில் அல்லது உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது பற்றி இருவரும் ஆலோசித்தனர். இதன்பின்னர் அறிக்கை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைனுடன் அமைதி ஏற்படக்கூடிய வழிகளைத் தேட ரஷ்யா தயாராக இருப்பதாகவும், உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு ஏற்ற வகையில் தீர்வுகளை வகுக்க உதவும் அமைதி ஒப்பந்தத்துக்கான முன்மொழிவு (memorandum) குறித்து புடின் பேசினார். ரஷ்யாவின் நிலைப்பாடு தெளிவாகவே இருப்பதாக கூறிய புடின், சரியான உடன்பாடு ஏற்பட்டால் உடனடி இடைநிறுத்தம் சாத்தியம்தான் என்றார். போர்நிறுத்த நிபந்தனைகளையும் அவர் தெளிவுபடுத்தினார். இனி எக்காலத்திலும் உக்ரைன் NATOவில் சேரக்கூடாது, கிரீமியா பகுதி முழுமையாக ரஷ்யாவுக்கே சேர்ந்ததாக அங்கீகரிக்கப்பட வேண்டும், யுத்தத்தின்போது ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட அனைத்து பகுதிகளும் தங்களிடம் தொடர வேண்டும், ரஷ்யா உரிமை கோரும் நான்கு உக்ரைன் பிராந்தியங்களும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை புடின் விதித்துள்ளார்.

அமைதி நோக்கி பயணிக்கச் செய்யக்கூடிய மிகச் சிறந்த வழிகளை தீர்மானிக்க வேண்டும் என்று புடின் கூறினார். புடினுடான பேச்சுவார்த்தை தகவல்களை, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் ஃபிரிட்ரிக் மெர்ஸ் மற்றும் பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப் உள்ளிட்டோருக்கும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜெலென்ஸ்கி அறிக்கை

இதற்கிடையே, ட்ரம்புடன் பேசியது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிக்கை வெளியிட்டார். அதில், உடனடி போர் நிறுத்தம் அவசியம் என்றும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகள் தொடர வேண்டும் என்றும், உக்ரைனின் அனுமதி இல்லாமல் ரஷ்யாவுடன் எந்தவிதமான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளக் கூடாது என்றும் டிரம்பிடம் வலியுறுத்தியதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தையை வாடிகனில் நடத்த போப் பதினான்காம் லியோ விருப்பம் தெரிவித்தார். இதுகுறித்து இத்தாலி பிரதமர் மெலோனி வெளியிட்ட அறிக்கையில், இதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். மூன்று ஆண்டுகளாக போர் தொடரும் நிலையில், உக்ரைனின் 20 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பகுதியை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இப்போது ட்ரம்பின் பேச்சுவார்த்தையால், போர் மெளனிக்கிறது… பூக்கள் பேசத் தொடங்கும் தருணம் பிறக்கிறது!