உலகம்

ரஷ்யாவின் இடைவிடாத தாக்குதல்.. உயிர்பிழைக்க இடம்தேடும் உக்ரைன் மக்கள்

Veeramani

ரஷ்ய படையினர் இடைவிடாது தாக்குதல் நடத்திவருவதால் உயிர் பிழைப்பதற்காக உக்ரைன் மக்கள் அங்குமிங்கும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது பல மணி நேரமாக வான்வெளி தாக்குதல் நடத்தும் ரஷ்யா, தற்போது அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்கத்தொடங்கியுள்ளது. உக்ரைனுக்குள் ராணுவ வாகனங்கள் மூலமாகவும் பாராசூட் மூலமாகவும் ரஷ்ய படை வீரர்கள் நுழைந்துள்ளனர்

இதனால் உக்ரைனில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகளில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர். தலைநகர் கீவ்-வில் தாக்குதல் நடப்பதால் அங்கிருந்து பிற நகரங்களுக்கு மக்கள் படையெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஏடிஎம்களில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருகின்றனர், கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் அலைமோதுகின்றனர். மேலும், போர் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய பணத்தின் மதிப்பு 9% சரிந்தது.

கார்கிவ் நகரம் அருகேயுள்ள உக்ரைனின் விமானத்தளம், ரஷ்யாவின் வான்வெளி தாக்குதலில் தீப்பற்றி எரிவதாக தகவல் வெளியாகி வருகின்றன. தங்களது தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் ராணுவ வீரர்கள் சரணடைந்து வருவதாக ரஷ்ய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. லூகான்ஸ்க் பகுதியில் 2 நகரங்களை கைப்பற்றியதாக ஏற்கனவே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ரஷ்ய போர்க்கப்பல்களை தங்கள் கடற்பகுதி வழியாக அனுமதிக்க வேண்டாம் என துருக்கி நாட்டிற்கு உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.