ஜெலன்ஸ்கி, புதின் x page
உலகம்

தொடரும் 3 ஆண்டு போர் |”உக்ரைனுடன் பேசத் தயார்” - ரஷ்ய அதிபர் புதின்!

உக்ரைனுடன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், போரைத் தீவிரப்படுத்துவதில் ரஷ்யா தொடர்ந்து ஆர்வம் காட்டியது. இதனால், ”ரஷ்யா-உக்ரைன் போரில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படாவிட்டால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில நாட்களுக்குள் அதில் இருந்து விலகுவார்” என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்திருந்தார்.

ஜெலன்ஸ்கி, ட்ரம்ப், புதின்

ஈஸ்டர் பண்டிகை கடந்த 20ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மட்டும் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். ஆனாலும், ஈஸ்டர் தினத்திலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டினார். இதனை தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நேற்று மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில், உக்ரைனுடன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், ”எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் நாங்கள் காத்திருக்கிறோம். ஒருநாள் ஈஸ்டர் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மேலும் போர் நிறுத்தங்களைத் தொடர விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல்முறையாக உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன்வந்துள்ளது. அதேவேளை, புதினின் இந்த அறிவிப்பு தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.