எலான் மஸ்க், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

ட்ரம்ப் - மஸ்க் இடையே முற்றும் மோதல்.. கேலி செய்யும் ரஷ்யா!

ட்ரம்ப் மற்று மஸ்க் இடையேயான பகை, மாஸ்கோவில் உள்ளவர்களிடம் கேலிக்கூத்துகளை தூண்டியிருக்கிறது.

Prakash J

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்டு ட்ரம்ப் வருவதற்கு உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், தன்னுடைய நிதியுதவியை வாரிவழங்கியதோடு, சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கான பிரசாரத்தையும் அதிகரித்தார். இதைத் தொடர்ந்து அவருடைய அரசில், அதாவது அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் DOGE துறையில் எலான் மஸ்க் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவருடைய ஆலோசனையின் பேரில், ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சிலவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு எதிராகவும் அங்கு போராட்டங்கள் வெடித்தன.

எலான் மஸ்க், ட்ரம்ப்

இந்த நிலையில், அமெரிக்காவின் செனட் அவையில் ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) என்ற மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த மசோதா குறித்து எலான் மஸ்க் மறைமுகமாகச் சாடினார். தவிர, ட்ரம்பின் நிர்வாகப் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, இந்த மசோதா குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்தார்.

இதனால், எலான் மஸ்க் - ட்ரம்ப் ஆகியோர் இடையே மோதல் ஆரம்பித்தது. எலான் மஸ்க் நிறுவனத்துக்கு செல்லும் பல ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தை நிறுத்தினால் அரசுக்கு செலவு குறையும் என அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். இதற்கு நாசா பயன்படுத்தி வரும் தன் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை, சேவையில் இருந்து நீக்கப்போவதாக மஸ்க் எச்சரித்தார். இதனால் அவர்களுடைய உறவில் மேலும் விரிசல் ஆரம்பித்துள்ளது.

எலான் மஸ்க், ட்ரம்ப்

இந்நிலையில், ட்ரம்ப் மற்று மஸ்க் இடையேயான பகை, மாஸ்கோவில் உள்ளவர்களிடம் கேலிக்கூத்துகளை தூண்டியிருக்கிறது. ”அமெரிக்காவில் நீங்கள் தீர்க்க முடியாத பிரச்னைகளை எதிர்கொண்டால், ரஷ்யாவுக்கு வாருங்கள். இங்கே நீங்கள் நம்பகமான தோழர்களையும் தொழில்நுட்ப படைப்பாற்றலின் முழுமையான சுதந்திரத்தையும் காண்பீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே பஞ்சாயத்து நடத்த தயாராக இருக்கிறோம் என்றும் அதற்கு கட்டணமாக ஸ்டார்லிங்க் பங்குகளை கொடுங்கள்” என மூத்த பாதுகாப்பு அதிகாரியும் முன்னாள் அதிபருமான டிமிட்ரி மெத்வடேவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுபோல் ரஷ்ய விண்வெளி நிர்வாகத்தை வழிநடத்திய ரோகோசின், ”மனதை தளரவிடாதீர்கள் மஸ்க், அமெரிக்காவில் எதுவும் முடியவில்லை என்றால் எங்களிடம் வாருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.