”வாய்ப்பளித்ததற்கு நன்றி” - ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறும் எலான் மஸ்க்.. நடந்தது என்ன?
அமெரிக்க அதிபராக 2வது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டிற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் DOGE துறையில் தலைமை ஆலோசகராக உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநருமான எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். இவருடைய ஆலோசனையின் பேரில், ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சிலவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு எதிராகவும் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் செனட் அவையில் ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) என்ற மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த மசோதா பல்வேறு பொருளாதார செலவீனங்களை மாற்றி அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதரவை திரட்டும் வகையில் நாடு முழுவதும் அதிபர் ட்ரம்ப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே, மசோதாவில் ட்ரில்லியன் டாலர் வரிச்சலுகை என்பது பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்று எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த எலான் மஸ்க், ”இந்த மசோதாவில் வரி குறைப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடியேற்ற அமலாக்கம் இருக்கின்றன. அரசின் பற்றாக்குறையை அதிகரிக்கும் வகையிலும், அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் பணியை குறைமதிப்பீடு செய்யும் வகையிலும் அமைகிறது. இந்த மசோதா பெரிதாகவோ அல்லது அழகாகவோ இருக்கலாம், ஆனால் இரண்டும் சேர்ந்து இருக்குமா எனத் தெரியவில்லை” என மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறைக்குத் தலைவராகப் பதவி வகிக்கத் திட்டமிடப்பட்ட நேரம் நிறைவடைந்துவிட்டதாக எலான் மஸ்க் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "சிறப்பு அரசு ஊழியராக என்னுடைய பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அரசின் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த அதிபர் ட்ரம்பிற்கு நன்றி; வரும் நாட்களில் அரசு செயல்திறன் துறை இன்னும் வலுவடையும் என்றும் அரசு செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றும்" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார் எலான் மஸ்க். தவிர, ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக இந்த தேர்தலில் எலான் மஸ்க் ரூ.2,500 கோடிக்கும் மேல் செலவு செய்தார் எனத் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் மீண்டும் அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், தன்னுடைய அரசு நிர்வாகமான DOGE துறையில் எலான் மஸ்க்கை தலைமை ஆலோசகராக நியமித்தார்.
அரசுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் வெடித்தபோதும் ட்ரம்ப், தொடர்ந்து எலான் மஸ்க்கிற்கு ஆதரவு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Big Beautiful Bill என்ற மசோதாவால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறுபுறம், டெஸ்லா நிறுவனத்தின் விற்பனையும், நிறுவன பங்கு மதிப்பு சரிந்துவருகிறது. ஆகையால், அவற்றைக் கவனிக்கும் பொருட்டு அதில் மீண்டும் எலான் மஸ்க் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.