SU57 Jet Fight India 5h generation Jet Fighter
உலகம்

நிறைவேறப்போகும் இந்தியாவின் கனவு.. களத்தில் குதித்த ரஷ்யா.. அசூர பலம் பெரும் இந்திய ராணுவம்!

இந்தியாவின் நீண்ட நாள் கனவான 5-ம் தலைமுறை போர் விமானங்கள் குறித்து முக்கிய தகவலை ரஷ்யா வெளியிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

Praveen Joshva L

சோவியத் ஒன்றியம் சிதைந்த பின்னரும் இந்தியா-ரஷ்யா இரு நாடுகளின் ராணுவ உறவு குறையாமல் தொடர்கிறது. அதிக செலவு காரணமாக இந்தியா விலகிய 5ம் தலைமுறை போர் விமான கூட்டு திட்டத்தை, ரஷ்யா தனியாக முன்னெடுத்து எஸ்யூ-57 ஐ உருவாக்கியது. இப்போது அந்த ஸ்டெல்த் விமானத்தை இந்தியாவுக்கு வழங்கவும், திட்டத்தில் இந்தியாவை மீண்டும் ஈடுபடுத்தவும் ரஷ்யா தயாராக இருப்பதாக புடின் அறிவித்திருப்பது, இரு நாடுகளின் மூலோபாய கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்தே இந்தியாவின் நம்பகத்தன்மை வாய்ந்த கூட்டணி நாடாக சோவியத் யூனியன் இருந்து வந்தது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் நடந்த போர்களில் சோவியத் இந்தியாவின் பக்கமே இருந்து, இந்தியாவுக்கு நவீன ஆயுதங்களை அளித்தது.

அதிலும் குறிப்பாக இந்திய விமானப்படை முழுக்க முழுக்க சோவியத்தின் தொழில்நுட்பத்துடனே உருவாக்கப்பட்டது. மிக் 21 விமானங்கள் முதல் சுகோய் ரக விமானங்கள் வரை இந்தியாவுக்கு சோவியத் பல்வேறு ராணுவ உதவிகளை செய்துள்ளது.

Mig 21

சோவியத் ஒன்றியம் சிதறிய பின்னரும் ரஷ்யாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு சிறப்பாகவே இருந்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் 5-ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கியுள்ள நிலையில், அதற்கான வேலைகளில் இந்தியா நீண்ட காலமாகவே தீவிரம் காட்டி வந்தது.

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை கூட்டாக உருவாக்கவும், தயாரிக்கவும் இந்தியாவும் ரஷ்யாவும் 15 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. எனினும் அதிக செலவு காரணமாக இந்த திட்டத்தில் இருந்து இந்தியா பின்வாங்கியது.

Su 57

இந்த நிலையில், ரஷ்யாவின் 5-ம் தலைமுறை விமானமான சுகோய் எஸ்யூ-57 போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து உரையாற்றிய ரஷ்ய அதிபர் புடின், இந்தியா-ரஷ்யா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களை அதிகரிக்கவேண்டும் என்றும், 5-ம் தலைமுறை போர் விமானமான சுகோய் ஸ்டெல்த் எஸ்யூ-57 விமானத் திட்டத்தில் இந்தியாவை ஈடுபடுத்துவதற்கு ரஷ்யா இன்னும் ஆர்வமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்த திட்டம் ரஷ்யா-இந்தியா கூட்டு தயாரிப்பாக இருந்திருக்க முடியும் என்றாலும் சில காரணங்களால் அது நடக்கவில்லை. எனவே இதனை நாங்கள் இதைத் தனியாகவே உருவாக்கினோம். எனினும் தற்போது இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.