\
Iranian Drone Attack on Kuwait Airport
kuwaitx page

குவைத் விமான நிலையத்தைச் சிதைத்த ஈரான்.. நிலைகுலைந்து நிற்கும் அமெரிக்கா!

சர்வதேச கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் எம்கியூ-1 ரக ஆளில்லா விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
Published on

சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலை ஒருவர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் தாக்குதல் காரணமாக குவைத்
சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கும் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல், தற்போது ஹார்முஸ் ஜலசந்தியின் பிரச்னையாகவும் மாறியுள்ளது. காரணம், 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், போரை நிரந்தரமாக நிறுத்தும் பேச்சுவார்த்தைகளும் இழுபறியாகவே இருந்து வருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில், இருதரப்பிலும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, ஈரானின் கோருக் மற்றும் கெஷ்ம் தீவுகளில் அமைந்துள்ள ரேடார் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலை முறியடிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்கா கூறியது. முன்னதாக, சர்வதேச கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் எம்கியூ-1 ரக ஆளில்லா விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து, ஈரான் நோக்கிச் சென்ற கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் தாக்குதல் காரணமாக குவைத் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. குவைத் பயணிகள் விமான முனையம் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலால் சர்வதேச விமானங்கள் குவைத் வான்வெளியை தவிர்த்து மாற்று வழியில் செல்கின்றன. ஜூன் 1ஆம் தேதிதான் குவைத் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மூடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் படைகள் வீசிய ஏவுகணைகள் இலக்கை தாக்கவில்லை என்றும் தங்கள் வான் பாதுகாப்புச் சாதனங்களால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையே போர்நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து ஈரானிய தூதர்கள் சமரசம் செய்வதை நிறுத்திவிட்டதாக ஈரானின் செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. ஆனால், இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுத்துள்ளார். எனினும், ஈரானின் இத்தகைய தாக்குதலால் அமெரிக்கா நிலைகுலைந்து போயுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com