செய்தியாளர் - கார்த்திகேயன்
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போரால், ரஷ்யாவிலும், உக்ரைனிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், தங்களது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. இந்தப் போருக்கு, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியினர் பலரும், தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால், ரஷ்யாவில் புதினின் செல்வாக்கு குறைந்திருக்குமோ என்ற எண்ணம், உலக நாடுகள் மத்தியில் எழுந்திருந்தது. எனவே, ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தலில், தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு புதின் தள்ளப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான ஸ்டேட் டுமா (State Duma) தேர்தல் நடைபெற்றது. தற்போது, அந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் வேளையில், புதினின் யுனைடெட் ரஷ்யா கட்சி, வெற்றி முகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 90.43 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகளில் புதினின் யுனைடெட் ரஷ்யா கட்சி 57.86% வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளது. யுனைடெட் ரஷ்யா கட்சியை எதிர்த்து வலுவான மாற்று சக்திகள் இல்லாதபோதிலும், இதர சில கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இடங்களைப் பெற்றுள்ளன. ரஷ்யக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சி 13.84% வாக்குகளையும், லிபரல் டெமாக்ரேட்டிக் கட்சி 8.9 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
மேலும், புதிய மக்கள் கட்சி 7.94 சதவீத வாக்குகளையும், A Just Russia என்ற கட்சி 4.95 சதவீத வாக்குகளையும் பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய மக்கள் கட்சிக்கு மக்கள் அளிக்கும் வாக்குகள், பொருளாதார நெருக்கடி மற்றும் போரின் தாக்கத்தால் புதினின் மீதுள்ள அமைதியான எதிர்ப்பின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.