கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கி பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வாரி வழங்கின. அதோடு ரஷ்யாவின் முக்கிய வருவாய் ஆதாரமான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதிக்கு தடை விதித்தன. இதனால் ரஷ்யா பெரும் இழப்புகளைச் சந்தித்தது.
இந்தச் சூழலில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் உயிர் நாடியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது.
ஏற்கெனவே ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் கச்சா எண்ணெய்யும் முடங்கியதால் உலக அளவில் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் உலக பொருளாதாரமே பாதிக்கப்படும் சூழல் உருவானது.
இந்த நிலையில் உலகளாவிய தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் அமெரிக்கா, ரஷ்யா இடையே முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரஷ்யா உடனடியாக 3 லட்சம் டன் டீசலை அமெரிக்கா மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு விநியோகிக்க ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ரஷ்ய டீசலுக்குக்கான தடை விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக இரு நாடுகள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய டிரம்ப், டீசல் தட்டுப்பாடு மற்றும் கடும் விலையேற்றத்தைக் குறைக்க, தடைகளில் தற்காலிக விலக்கு அளித்து, ரஷ்ய டீசல் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், இதன்மூலம் அமெரிக்காவில் விவசாயிகள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் டீசல் விலையேற்றம் கட்டுக்குள் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் இந்த ஒப்பந்தம் ரஷ்யாவின் போர் பொருளாதாரத்திற்கு மீண்டும் நிதி வலுவூட்டும் நடவடிக்கை என்றும், இது முற்றிலும் தவறான முடிவு என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல இந்த நடவடிக்கை ஈரானுக்கும் பின்னடைவாக அமையும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.