பூமிக்குள் புதைந்துள்ள நிலக்கரியை எடுத்து, எரித்தே உலகில் பெருமளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை எரிக்கும்போது வெளிப்படும் கரியமில வாயுவே சுற்றுச்சூழல் சீர்குலைவுக்கு காரணமாகி புவிவெப்பமாதல் வரை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகில் வெளியாகும் 40 விழுக்காடு கரியமில வாயு நிலக்கரி எரிப்பிலிருந்தே வருகிறது என்ற புள்ளிவிவரம் இதன் பயன்பாட்டை குறைப்பதன் அவசியத்தை உணர்த்தும். எனவேதான் நிலக்கரி பயன்பாட்டை குறைத்து மரபுசாரா எரிசக்திக்கு மாற உலக நாடுகள் முனைப்பாக உள்ளன. இந்நிலையில், சர்வதேச எரிசக்தி முகமை வெளியிட்டுள்ள ஆண்டறிக்கை கவனம் பெறுகிறது.
2025ஆம் ஆண்டு உலகின் நிலக்கரி பயன்பாடு வரலாறு காணாத அளவு உயர்ந்து 884 புள்ளி 5 கோடி டன்களாக உயரும் என கணித்துள்ளது. எனினும் அரசுகளின் நடவடிக்கைகளால் பல நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அடுத்த 5 ஆண்டுகளில் குறையும் என்றும் அந்த முகமை மதிப்பிட்டுள்ளது.
குறிப்பாக சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியற்றில் நிலக்கரி பயன்பாடு குறையும் என்பது ஆறுதலான செய்தி. சீனாவின் பயன்பாடு 18 புள்ளி 1 கோடி டன்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பயன்பாடு 15 புள்ளி 3 கோடி டன்கள், பிற நாடுகளின் பயன்பாடு 17 புள்ளி 9 கோடி டன்களாகக் குறையும் என்கிறது அந்த அறிக்கை. எனினும் இந்தியாவில் மட்டும் நிலக்கரி பயன்பாடு 22 புள்ளி 5 கோடி டன்கள் அதிகரிக்கும் எனக்கூறியுள்ளது சர்வதேச எரிசக்தி முகமை.
இந்தியாவில் மின்சார உற்பத்திக்கு நிலக்கரியையே பெரிதும் சார்ந்திருக்கவேண்டியுள்ளது என்பதுதான் இதற்கு காரணம். நாட்டின் மின்னுற்பத்தியில் 70% நிலக்கரி ஆற்றல் மூலமே பெறப்படுகிறது. எனினும் மின்சாரத்துக்கு எரிசக்தி பயன்பாட்டை குறைக்க அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் பூமிப்பந்தை காப்பதன் பொறுப்பு அரசுகளுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதருக்கும் உள்ளது. தேவையற்ற மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது, பசுங்குடில் வாயுக்களை வெளியிடும் தொழிலக, போக்குவரத்து முறைகளிலிருந்து மாறுவது, சூரிய ஒளி மின்சாரம் போன்ற மரபுசாரா எரிசக்தி வகைகளுக்கு மாறுவது வரை தனிமனிதர் உலகின் நலனுக்கு பங்களிக்க முடியும்.