மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், செங்கடல் பகுதியில் கடல் வழிப் போக்குவரத்தை பாதுகாக்க சவூதி அரேபியா தலைமையில் புதிய பன்னாட்டு கடற்படை கூட்டணி உருவாகியுள்ளது. ரியாத்தில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் 43 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற நிலையில், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, சூடான், ஜிபூட்டி உள்ளிட்ட 14 நாடுகள் இந்த கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ ஆதரவு தெரிவித்துள்ளன. பாப் அல்-மந்தப் நீரிணை, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாகச் செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தக் கூட்டணியின் முக்கிய நோக்கம் என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் முடங்கியிருக்கிறது. இதனால், சர்வதேச எண்ணெய் விநியோகம் மற்றும் வர்த்தகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டதுடன், கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்வை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தச் சூழலில் தான், ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சிக் குழு, கடந்த ஜூலை 20-ஆம் தேதி சவூதி அரேபியாவுக்கு எதிராக கடற்படை முற்றுகையை அறிவித்தது. இதைத்தொடர்ந்து, செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தப் நீரிணை (Bab-el-Mandeb) வழியாகச் செல்லும் கப்பல்களை குறிவைத்து அந்த அமைப்பு தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
வளைகுடாப் போரினால் ஏற்கனவே உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 10% குறைந்திருக்கிறது. இந்த நிலையில், பாப் அல்-மந்தப் நீரிணையை குறிவைத்து ஹவுதி அமைப்பு மேற்கொண்டுள்ள கடல் முற்றுகை, சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு மேலும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. சவூதியின் கணிசமான அளவிலான எண்ணெய் ஏற்றுமதிக் கப்பல்கள் இந்த வழித்தடத்தைச் சார்ந்திருப்பதால், இந்த பாதை தொடர்ந்து பாதிக்கப்பட்டால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் கூடுதலாக சுமார் 7% வரை சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தச்சூழலில் தான், செங்கடல் பகுதியில் கடல்வழிப் போக்குவரத்தை பாதுகாக்கும் நோக்ககில் சவூதி அரேபியா தலைமையில் புதிய பன்னாட்டு கடற்படை கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணிக்கு சவூதி அரேபியா தலைமை வகிக்கும் எனவும் இந்தக் கூட்டணி முற்றிலும் தற்காப்பு சார்ந்தது என்றும், இது எந்தவொரு நாட்டையோ அல்லது அமைப்பையோ குறிவைக்காது என்றும், அனைத்து நடவடிக்கைகளும் சர்வதேச சட்டத்திற்கும், ஒவ்வொரு உறுப்பு நாட்டின் தேசிய இறையாண்மைக்கும் உட்பட்டு செயல்படும் என்றும் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், மொத்தமுள்ள 6 வளைகுடா நாடுகளில் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகள் மட்டும் சவூதி தலைமையிலான இந்தக் கடற்படை கூட்டணிக்கு இதுவரை அதிகாரப்பூர்வ ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.