சிரியா கிளர்ச்சியாளர்கள் எக்ஸ் தளம்
உலகம்

“தனிநபர் சுதந்திரம் பாதுகாக்கப்படும்” - சிரியாவைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படை உறுதி!

“தனிநபர் சுதந்திரம் பாதுகாக்கப்படும்” என சிரியாவைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படை உறுதி அளித்துள்ளது.

Prakash J

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, சமீபத்திய தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதியுள்ளது.

இதையடுத்து, தற்போது தலைநகர் டமாஸ்கஸ்சில் அமைதி நிலவுகிறது. ஆட்சியிலிருந்து அசாத் தூக்கி எறியப்பட்டிருந்தாலும், இன்னும் பிரதமர் பதவியில் நீடிக்கும் Mohammed Ghazi Jalali, அதிகார மாற்றம் இயல்பாக நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக தெரிவித்தார். அதிபர் பஷார் அசாத் தூக்கி எறியப்பட்டதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த பல லட்சம் அகதிகள் மீண்டும் சிரியாவுக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், ஆட்சியை கைப்பற்றியுள்ள கிளர்ச்சிப் படையின் தலைவர், “தனிநபர் சுதந்திரம் பாதுகாக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற கிளர்ச்சிப் படையின் தலைவரான அபு முகமது அல்-ஜோலானி.

இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பெண்களின் ஆடைகள் மீது கட்டுப்பாடுகளை திணிப்பதோ, அவர்களின் தோற்றம், உடைகள் தொடர்பாகவோ எந்த திணிப்பதோ எதுவும் இனி செய்யப்படாது. நாகரிகச் சமூகத்தை கட்டமைக்கும் விதமாக தனிநபர் உரிமைகளும், தனிமனித சுதந்திரமும் உறுதி செய்யப்படும்” என உறுதிளித்தார். இதைப் பலரும் வரவேற்றுள்ளனர்.